வைத்தியர் ஷாபி சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாகக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஏன் கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? - கேள்வி எழுப்பினார் துமிந்த நாகமுவ - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

வைத்தியர் ஷாபி சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாகக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஏன் கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? - கேள்வி எழுப்பினார் துமிந்த நாகமுவ

(நா.தனுஜா)

நாட்டில் தற்போது 69 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியர் ஷாபி சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாகக்கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், ஏன் கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? என்று தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பினார்.

மீண்டும் தீவிரமடைந்திருக்கும் கொரோனா வைரஸ் பரவலினால் அரச மற்றும் தனியார்த்துறை ஊழியர்கள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இதன் விளைவாக அரச ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வைரஸ் பரவலின் முதலாவது அலையின்போது அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் சில வழிகாட்டல்கள் மற்றும் தீர்மானங்களை வெளியிட்டது.

ஆனால் தற்போது அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்திலேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வர்த்தமானி அறிவித்தலின்படி அரச நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வாரத்திற்கு இருமுறை அலுவலகத்திற்கு அழைக்க முடியும் என்றும் ஏனைய தினங்களில் விடுமுறை வழங்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மாதத்திற்கு 8 நாட்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடியும். எனினும் அது குறித்து அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதன் விளைவாக பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை. மாறாக அனைத்து ஊழியர்களும் தினமும் அலுவலகத்திற்கு அழைக்கப்படுகின்றனர். இதனால் தற்போதைய தொற்றுப்பரவலுக்கு மத்தியில் ஊழியர்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

அடுத்த முக்கிய விடயம் என்னவெனில், கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையின்போது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் அரச நிறுவனங்களில் பணியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்காக பரிந்துரை உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் அவ்வாறான எத்தகைய பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை.

தற்போதுவரை 69 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமடைந்துவரும் நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித வரையறைகளையும் விதிப்பதற்குத் தவறியிருக்கிறது. 

குருணாகலை வைத்தியசாலையில் வைத்தியர் ஷாபி சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாகக்கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், ஏன் கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை?

அடுத்ததாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு ஊழியர் அல்லது ஊழியர் குழாமொன்று கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தொழிலில் இடையூறு ஏற்படுத்தினால் அவர்களுக்கு குறைந்த சம்பளத்தை வழங்குமாறு கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த அமைச்சர்கள் அவர்களுக்குரிய கொடுப்பனவு அனைத்தையும் பெற்று சட்டைப்பையில் போட்டுக்கொண்டு இவ்வாறு கூறுவதில் எத்தகைய நியாயம் இருக்கிறது? அரைவாசி சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, கடைகளுக்குச் சென்று அரைவிலையில் பொருட்களைக் கொள்வனவு செய்யமுடியுமா?

கொரோனா வைரஸ் பரவலினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், உலகளாவிய ரீதியில் எந்தவொரு முன்னணி நிறுவனங்களும் வீழ்ச்சி காணவில்லை. அவை பெருமளவில் இலாபம் உழைத்திருக்கின்றன. அதேபோன்று இலங்கையிலும் முன்னணி வர்த்தகர்கள் பெருவருமானம் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் இந்தத் தொற்றுநோய்ப் பரவலினால் சாதாரணமக்களே பாதிப்பிற்குள்ளானார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் கர்ப்பிணிப் பெண்களையும் சாதாரண மக்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் மறந்துபோகின்றது. மாறாக கொழும்பு துறைமுகநகரத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான நீதிமன்ற அனுமதியையும் பெறுவதிலும் தெளிவுடனேயே செயற்பட்டு வருகின்றது. இவற்றிலிருந்து நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகின்றது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment