கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீ பரவிய கப்பலிலிருந்து 8 கொள்கலன்கள் கடலுக்குள் விழுந்தன - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீ பரவிய கப்பலிலிருந்து 8 கொள்கலன்கள் கடலுக்குள் விழுந்தன

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய திடீர் தீ மிக மோசமான நிலையில் அக்கப்பலை ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை குறித்த கப்பலில் தீ பரவலுக்கு இடையே இரு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கப்பல் ஊழியர்கள் இருவர் இதன்போது காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த கப்பல் ஊழியர்களான இந்தியர்கள் இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடர்படையினரால் அனுமதிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கூறினார். 

அத்துடன் அக்கப்பலின் பணிக் குழுவில் இருந்த ஏனைய 23 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் குறித்த கப்பலில் கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் இந்த திடீர் தீ பரவல் ஆரம்பித்துள்ளதாக, தமக்கு அறிவிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கேசரிக்கு தெரிவித்தார். 

எனினும் 21 ஆம் திகதி நண்பகலாகும் போது குறித்த கப்பலின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. எனினும் விட்டுவிட்டு தீ பரவல்கள் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்ட நிலையில், கடற்படையின் சிறப்பு தீயணைப்பு பிரிவினர் உள்ளடங்கிய குழுவினர் குறித்த கப்பலை சூழ விஷேட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கெப்டன் இந்திக டி சில்வா மேலும் கூறினார்.

தீ பரவல் குறித்த தகவல் கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்றதும், கடற்படையின் ஸ்ரீ லங்கா சாகர, சிதுரல ஆகிய ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல்கள், அதிவேக தாக்குதல் படகொன்றும் தீயணைப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனைவிட துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 3 டக் படகுகளும் தீயணைப்பு பணிகலில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையிலேயே பல மணி நேர போராட்டத்தின் பின்னர் கடந்த 21 ஆம் திகதி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இலங்கையின் கடல் பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற காலநிலை (பலத்த காற்றுடன் கூடிய நிலை) காரணமாக, நேற்று குறித்த கப்பலில் தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டார். 

இவ்வாறு மிக மோசமாக தீ பரவி வரும் நிலையில், குறித்த கப்பலில் இருந்த 8 கொல்கலன்கள் கடலுக்குள் வீழ்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான பின்னனியிலேயே தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படையின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க கேசரியிடம் கூறினார்.

ஏற்கனவே கடந்த 21 ஆம் திகதியும் விமானப்படை 425 கிலோ உலர்ந்த இரசாயனங்களை தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக வானிலிருந்து தூவிய நிலையில் நேற்றும் அந் நடவடிக்கைகலை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த சரக்கு கப்பலிலுள்ள இரசாயணங்கள் கடலில் கலப்பதன் ஊடாகவும் கப்பலிலிருந்து வெளியேறும் புகை காரணமாகவும் கடல் மற்றும் சூழல் பெரிதும் மாசடைய வாய்ப்புள்ளதாக சூழல் பாதுகாப்பு அதிகார சபை கூறுகின்றது. 

இந்நிலையில் இலங்கையை சூழ உள்ள கடற்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமுத்திர சூழல் மாசடைவை குறைத்துக் கொள்ளவும், தீ பரவி வரும் கப்பலை தற்போது உள்ள இடத்திலிருந்து 50 கடல் மைல் தூரம் வரை இழுத்து செல்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கப்பலிலிருந்து வெளியாகும் புகை காரணமாக நாட்டின் சூழல் கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கப்பலின் கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இரசாயனங்கள் மேலும் தீப்பிடிக்கும் நிலையில், தீ விபத்து குறித்து கப்பலின் காப்புறுதி நிறுவனம் மற்றும் கப்பலின் உள்நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கப்பலின் தீயணைப்பு நடவடிக்கைகளில் நண்பகல் தாண்டியும், கடற்படையினரும், நெதர்லாந்தை சேர்ந்த சிறப்பு நிபுணர்களும், விமானப்படை, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுமாக பல்வேறு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad