விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கிய விவகாரம் - பெலாரஸ் மீது புதிய தடைகளை விதித்தது ஐரோப்பிய யூனியன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கிய விவகாரம் - பெலாரஸ் மீது புதிய தடைகளை விதித்தது ஐரோப்பிய யூனியன்

விமானம் வழிமறித்து தரையிறக்கப்பட்ட விவகாரத்தில் பெலாரஸ் நாடு மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.

பெலாரஸ் நாட்டின் அதிபர் பதவியில் கடந்த 27 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்தது.

அதைத்தொடர்ந்து, தன்னை விமர்சிப்பவர்களை அவர் ஒடுக்கி வருகிறார். இதனால், பெரும்பாலான அரசியல் எதிரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர், சிலர் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். அதுபோல், பெலாரஸ் நாட்டை சேர்ந்த ரோமன் புரோட்டசெவிச் என்ற பத்திரிகையாளர் அதிபரை விமர்சனம் செய்து வருகிறார்.

அதிபரின் அத்துமீறல் அதிகரித்ததால், புரோட்டசெவிச், லிதுவேனியா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்தபடி, அதிபர் தேர்தலில் உண்மையிலேயே வெற்றி பெற்றதாக கருதப்படும் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக எழுதி வருகிறார்.

இதற்கிடையே, கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரில் எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் ரோமன் புரோட்டசெவிச் பங்கேற்றார். பின்னர், அவர் லிதுவேனியா தலைநகர் வில்னியசுக்கு திரும்புவதற்காக ரியான்ஏர் நிறுவன விமானத்தில் புறப்பட்டார். அந்த விமானத்தில் அவருடன் 171 பயணிகள் இருந்தனர்.

விமானம் பெலாரஸ் நாட்டு வான் மண்டலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென பெலாரஸ் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு ஒரு அழைப்பு வந்தது. 

விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே, பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை இறக்குமாறும் அதில் பேசிய அதிகாரி கூறினார்.

அதே சமயத்தில், பெலாரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று, அந்த பயணிகள் விமானத்தை வழிமறித்து அரவணைத்து கூட்டிச் சென்றது. இதனால், வேறு வழியின்றி மின்ஸ்க் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

அதில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பத்திரிகையாளர் ரோமன் புரோட்டசெவிச்சை பெலாரஸ் போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். 

அப்போது, தனக்கு மரண தண்டனை விதித்து விடுவார்கள் என்று புரோட்டசெவிச் கூச்சலிட்டார். அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ நேரடி உத்தரவின்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெலாரஸ் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு அதிர்ச்சிகரமான நடவடிக்கை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன்டெர் லியன், இந்த சட்டவிரோத செயலுக்கு பெலாரஸ் பலத்த பின்விளைவுகளை சந்திக்கும் என கூறினார். இத்தாலி, சைப்ரஸ், லாட்வியா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றி ஐரோப்பிய யூனியன் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் மேற்கொண்டது. இதில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர்.

இதன் முடிவில், பத்திரிகையாளர் கைது விவகாரம் மற்றும் விமானம் வழிமறிக்கப்பட்டு, தரையிறங்கச் செய்தது ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தில் பெலாரஸ் நாடு மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்து உள்ளது. இதேபோல் ஐரோப்பிய யூனியன் வான் வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளது.

லித்துவேனியா நாடு முன்பே பெலாரஸ் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு விமானங்கள் தங்களுடைய வான் வழியே பறப்பதற்கான தடையை விதித்து விட்டது. இங்கிலாந்து அரசும் பெலாரசுக்கான தேசிய விமான அனுமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

இதுதவிர, இங்கிலாந்து விமானங்கள் பெலாரஸ் வான்வழியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad