பத்தரமுல்லையில் 3 கோடிக்கும் அதிக பணம், தங்க ஆபரணங்கள் கொள்ளை - ஒருவர் கைது, மற்றொருவரை கைது செய்ய நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

பத்தரமுல்லையில் 3 கோடிக்கும் அதிக பணம், தங்க ஆபரணங்கள் கொள்ளை - ஒருவர் கைது, மற்றொருவரை கைது செய்ய நடவடிக்கை

(செ.தேன்மொழி)

பத்தரமுல்ல - பெலவத்த பகுதியில் 3 கோடியே 6 இலட்சத்து 36,500 ரூபாய் பணம் மற்றும் தங்க நகை உள்ளிட்ட பெறுமதி மிக்க பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறிதாவது, தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தரமுல்ல - பெலவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த 8 ஆம் திகதி, கொள்ளையர்கள் இருவர் வீட்டை உடைத்து பணம், தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பல பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களால் 3 கோடி 6 இலட்சத்து 36500 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தையும் சந்தேகநபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் சி.சி.ரீ.வி காணொளி காட்சிகள் ஊடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கொள்ளையர்கள் இருவரும் வீட்டுக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியேறும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். பெலிவுள்ளோய பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரது வீட்டுக்கு அருகில் இருந்து 2 கோடியே 12 இலட்சத்து 22,748 ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பில் இன்னுமொரு நபரை கைது செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் ஏதாவது ஒரு வீட்டில் தங்குவதால், ஏனைய வீடுகளின் பாதுகாப்பை அவர்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இது போன்ற கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad