கப்பலிலிருந்து கரையொதுங்கிய பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகளில் 300 இராணுவ வீரர்கள் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

கப்பலிலிருந்து கரையொதுங்கிய பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகளில் 300 இராணுவ வீரர்கள்

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளாகியுள்ள கப்பலிலிருந்து கடலில் விழுந்து கரையொதுங்கிய பொருட்களை பொதுமக்கள் எடுப்பதை தடுப்பதற்காக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கமைய இன்று வியாழக்கிழமை 300 இராணுவத்தினர் நீர்கொழும்பு கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பணிகளில் இராணுவத்தின் பீரங்கி படை, வெடி குண்டு அகற்றும் படை மற்றும் ட்ரோன் படை உள்ளிட்டவை ஈடுபட்டிருந்ததாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அதற்கமைய நீர்கொழும்பு கடற்கரையில் 6 கிலோ மீற்றர் வரை இராணுவத்தினரால் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

வடமேற்கு கடற்கரைப் பகுதியில் கப்பலிலிருந்து கரையொதுங்கிய இரசாயன பொருட்களை மக்கள் சேரிப்பதாக பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டதோடு, இவ்வாறு கரையொதுங்கிய பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் கோரப்பட்ட நிலையிலேயே இன்றையதினம் இராணு வீரர்கள் அப்பணியில் இணைந்தனர்.

இதன்போது கடல்கரை மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஆபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து ஆராயுமாறு மேற்கு பாதுகாப்பு படைதளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகேவிற்கு ஆலோசனை வழங்கியதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad