இரசாயப்பதார்த்தங்கள் அடங்கிய கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதித்தவர்கள் யார் ? - கேள்வி எழுப்பியிருக்கும் கலாநிதி அஜந்தா பெரேரா - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

இரசாயப்பதார்த்தங்கள் அடங்கிய கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதித்தவர்கள் யார் ? - கேள்வி எழுப்பியிருக்கும் கலாநிதி அஜந்தா பெரேரா

(நா.தனுஜா)

வெளிநாட்டுக்குச் சொந்தமான கப்பலொன்றை எமது கடற்பரப்பில் நிறுத்தி வைப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். அவ்வாறெனின் இரசாயப்பதார்த்தங்கள் அடங்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதித்தவர்கள் யார் என்று கலாநிதி அஜந்தா பெரேரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து அதன் சிதைவுகள் தற்போது நீர்கொழும்பு கடலோரத்தில் கரையொதுங்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் அந்தக் கப்பலில் இருந்து வெளிவரக்கூடிய எண்ணெய்க் கசிவினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது அண்மையில் கொழும்புத் துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அக்கப்பலில் வைக்கப்பட்டிருந்த இரசாயன (நைற்றிரிக் அமிலம்) அமிலம் அடங்கிய சுமார் 25 கொள்கலன்கள் தீயினால் சேதமடைந்தும் நீருடன் கலந்தும் உள்ளன.

அதுமாத்திரன்றி எண்ணெய்க் கசிவுகள் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் என்பனவும் கடல் நீருடன் கலந்து வருகின்றன. 

இந்தக் கப்பலில் மேற்கண்ட இரசாயனப் பதார்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஏற்கனவே சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள நிலையிலும்கூட, இக்கப்பல் எமது நாட்டின் கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான கப்பலொன்றை எமது கடற்பரப்பில் நிறுத்தி வைப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். அவ்வாறெனின் இரசாயப் பதார்த்தங்கள் அடங்கிய இந்தக் கப்பலை இலங்கைக் கடற்பரப்பிற்குள் அனுமதித்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது.

அதுமாத்திரமன்றி குறித்த கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான வசதிகள் எம்மிடம் இல்லாத காரணத்தால் ஏனைய நாடுகளிடம் தீயை அணைப்பதற்கு உதவிகோர வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

தற்போது அந்தக் கப்பல் எரிந்து முழுமையாக சிதைவடைந்து வருகின்றது. இதனால் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சினை சூழலியல் பாதிப்புக்களாகும். 

குறிப்பாக கப்பலில் வைக்கப்பட்டிருந்த நைற்றிரிக் அமிலம் கடலில் கலப்பதன் விளைவாக, கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் முழுமையாக அழிந்துவிடும் வாய்ப்புக்கள் உள்ளன. அதுமாத்திரமன்றி கடற்பாறைகளும் பெருமளவில் பாதிக்கப்படும்.

இத்தகைய கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கு அவசியமான போதிய வளங்கள் எம்மிடம் இல்லாத நிலையில் குறித்த கப்பல் எமது கடற்பிராந்தியத்திற்குள் நுழைய ஏன் அனுமதி வழங்கப்பட்டது? 

அதேபோன்று இதனால் ஏற்பட்ட சேதத்திற்காக எமக்கு எவ்வளவு நட்டஈடு வழங்கப்பட்டாலும், சூழலுக்கு ஏற்பட்ட தாக்கத்தை ஈடுசெய்வதற்கு அது போதுமானதாக அமையாது.

எனவே எதிர்வரும் காலங்களில் சுற்றாடல் அமைச்சு மேலும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். 

அதுமாத்திரமன்றி இவ்வாறான விபத்துகள் ஏற்படும்போது அதனை எதிர்கொள்வதற்கு அவசியமான உபகரண வசதிகளைப் பெற்றுக் கொள்வதுடன், உரிய தரபமினருக்கு அவசியமான பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad