இலங்கையின் முதலாவது பெண் பீடாதிபதி பேராசிரியர் யோகா இராசநாயகம் காலமானார் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

இலங்கையின் முதலாவது பெண் பீடாதிபதி பேராசிரியர் யோகா இராசநாயகம் காலமானார்

இலங்கையின் முதலாவது பல்கலைக்கழக பெண் பீடாதிபதியும், இலங்கையின் முதலாவது தமிழ் பெண் பல்கலைக்கழக வேந்தருமான வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் திங்கட்கிழமை காலமானார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1959ம் ஆண்டு புவியியல்துறை பட்டதாரியான இவர் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியபடி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டதுடன் தொடர்ந்து பிரித்தானியாவின் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றார்.

புவியியல்துறை கற்கைகளுக்கு அப்பாலும், இசைத்துறையிலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றிருந்த அவர், சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகராகவும், வீணை இசை வித்தகராகவும் விளங்கியதுடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல வானொலி இசை நிகழ்ச்சிகளையும் இவர் நடாத்தியிருந்தார்.

1963ம் ஆண்டு முதல் கொழும்பு பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளராக தன் பணியைத் தொடர்ந்த அவர்,அங்கு சிரேஷ்ட விரிவுரையாளராக தரமுயர்ந்து துறைத்தலைவராகவும் நீண்ட நாட்கள் கடமையாற்றினார். 

இந்தக் காலப்பகுதியில் புவிவியல்துறை மற்றும் பால்நிலை சமத்துவம் சார்ந்த பல்வேறு புலமைசார் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறியின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி, தன்னுடைய துறைக்கு அப்பாலும் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டியிருந்தார்.

அவரின் நீண்ட அனுபவம் மற்றும் புலமைத்துவத் தேர்ச்சி காரணமாக 2002ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியாக நியமனம் பெற்ற பேராசிரியர் யோகா இராசநாயகம், இலங்கையின் முதலாவது பெண் பீடாதிபதி என்ற பெருமையை இதன்மூலம், பெற்றுக்கொண்டார்.

பல்கலைக்கழக சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், தேசிய சமூக கற்கைகள் நிறுவனத்தின் புலமைத்துவப் பொறுப்பதிகாரியாகவும், சிரேஷ்ட ஆலோசகராகவும் 2006 முதல் 2014 வரையில் செயற்பட்டுவந்த வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் அவர்கள், 2011ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன்மூலம், இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

கொழும்பு ஹவ்லொக் வீதியில், 413/2C என்ற இலக்கத்தில் வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் வசித்துவந்த ஒழுங்கை, அவர் வேந்தராக நியமிக்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் வேந்தர் வீதி என்ற மாற்றப்பட்ட நிலையில் அங்கு தான் வாழ்வைத் தொடர்ந்த வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் அவர்கள், சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad