(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
ஏப்ரல் குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சாரா என்ற பெண் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் இதுவரை மறுக்கவில்லை. அப்படியானால் அவர் தொடர்பில் அரசாங்கம் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டில் ஊக்க பதார்த்தம் பயன்பாட்டிற் கெதிரான சமவாய சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஏப்ரல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அங்கிருந்த வீடொன்றில் 16 பேர் இருந்துள்ளனர். அங்கு இடம்பெற்ற வெடிப்பில் 3 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் உயிரிழந்திருந்தனர். அந்த மூவரில் சஹ்ரானின் மனைவி மற்றும் அவரது மகள் அடத்தாக சாரா என்ற பெண்ணாகும். டீ.என்.ஏ. பரிசோதனையிலும் சாரா உயிர் தப்பியிருப்பது உறுதிப்பட்டிருக்கின்றது.
அத்துடன் சாரா கடல் மாரக்கமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் கெப் ரக வாகனத்தில் அவருடன் களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பிரிவு பொலிஸ் பிரதானி அபூபக்கரும் சென்றதாக சாட்சியமளிக்கபட்டிருக்கின்றது. அதன் பிரகாரம்தான் அபூபக்கர் கைது செய்யப்பட்டார். தற்போதும் அவர் பொலிஸ் கட்டுப்பாட்டில் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றார். ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் அவரிடம் விசாரணை மேற்கொண்டும் சாரா தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
குறிப்பாக சாராவை இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு கூட அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அதனால் ஏப்ரல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை. ஆனால் அரசாங்கம் இதனை அடிப்படையாக் கொண்டு வேறு விடயங்களை மேற்கொண்டு வருகின்றது. அதேபோன்று எமக்கு எதிராக குற்றம் சுமத்தி விசாரணையை காலம் கடத்தி வரும் நடவடிக்கையையே அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது.
அதனால் எமது அரசாங்கத்தினால் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமல்போனதற்கு அரசியல் ரீதியில் மக்கள் எமக்கு தண்டனை வழங்கி இருக்கின்றார்கள். தற்போது சட்ட ரீதியில் அந்த மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அதனை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment