இந்திய மீனவர்களால் மன்னார் மீனவர்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம், வெளி மாவட்டங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - மாவட்ட அரசாங்க அதிபர் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

இந்திய மீனவர்களால் மன்னார் மீனவர்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம், வெளி மாவட்டங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - மாவட்ட அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டம் தற்போதைய சூழ்நிலையில் பாதுகப்பாக உள்ள போதிலும், நாங்கள் கவனம் இன்றி நடந்து கொண்டால் எதிர்வரும் நாட்களில் நாங்கள் பாரதூரமான நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான விசேட ஆலோசனைக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

குறித்த விசேட ஆலோசனைக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முப்படையினர், அரச தனியார் போக்குவரத்து சங்க பிரதி நிதிகள், பிரதேசச் செயலாளர்கள் மற்றும் துறை சார் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ”போக்கு வரத்து துறை சார்ந்து பயணம் செய்பவர்களுக்கு போக்கு வரத்து துறையினர் உரிய சுகாதார நடைமுறைகளை அறிவுறுத்தி போக்கு வரத்து சேவைகளை மேற்கொள்வதோடு, பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதோடு, பயணம் செய்பவர்கள் முகக்கவசம் அணிவதை பேரூந்தின் சாரதி, நடத்துனர்கள் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு வந்த 4 நபர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர். அவர்களுக்கு பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்ட போது அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது இந்திய மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வருவதாக குறித்த கலந்துரையாடலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், விழிர்ப்புணர்வையும் வழங்க ஆலோசித்துள்ளோம். மீனவர்களின் கிராமங்களுக்குச் சென்று கொரோனா தொற்று தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கவும், இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மிக பாரதூரமான சூழலை அவர்களுக்கு தெழிவுபடுத்தி அந்த சூழல் எமது மாவட்டத்தில் ஊடாக இலங்கைக்குள் நுழையாத வகையில் தடுத்து நிறுத்தவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

எனவே பொதுமக்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின் பற்ற வேண்டும். பொலிஸார் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு கலந்துரையாடி உள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையை பொதுமக்கள் கருத்தில் கொண்டு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இருக்கமாக பின்பற்ற வேண்டும்.

மன்னார் மாவட்டம் தற்போதைய சூழ்நிலையில் பாதுகப்பாக உள்ள போதிலும், நாங்கள் கவனம் இன்றி நடந்து கொண்டால் எதிர்வரும் நாட்களில் நாங்கள் பாரதூரமான நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் செல்லுதல், பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளவும். குறிப்பாக இந்த காலங்களில் மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

கூடுதலாக ஒன்று கூடுவது, முகக்கவசம் அணியாது பயணம் மேற்கொள்வது போன்ற விடையங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் எமது சமூகத்தை பாதுகாக்க தனிப்பட்ட ஒவ்வொறு நபரும் இந்த விடையங்களில் கவனம் எடுத்து செயல் பட வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment