(எம்.மனோசித்ரா)
புத்தாண்டின் பின்னர் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. எனினும் மக்கள் இது தொடர்பில் வீண் அச்சமடையத் தேவையில்லை. நிலைமை தீவிரமடையும் பட்சத்தில் சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், புத்தாண்டின் பின்னர் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது.
இது தொடர்பில் சுகாதார தரப்பு மற்றும் கொவிட் தடுப்பிற்கான தேசிய செயலணி உள்ளிட்டவற்றால் ஏற்கனவே மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், துரதிஷ்டவசமாக மக்கள் அதன்படி செயற்படாதததை அவதானிக்க முடிந்தது.
எவ்வாறிருப்பினும் மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. நாட்டில் முதலாம், இரண்டாம் அலை ஏற்பட்ட போது சில நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு உள்ளிட்ட சகலரும் ஒன்றிணைந்து அதனை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியமையால் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடியதாக இருந்தது. எனவே வீண் அச்சமடையத் தேவையில்லை.
சுகாதார அமைச்சும், அரசாங்கமும் இது தொடர்பில் மிக அவதானத்துடன் உள்ளது. இதனை நிலைமையை மேலும் தீவிரமடையாமல் அரசாங்கத்தால் தடுக்க முடியும்.
கொவிட் பரவல் அதிகமாகக் காணப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரையில் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
எதிர்பாராதவிதமாக வைரஸ் தொற்று தீவிரமடைந்தால் சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது என்றார்.
No comments:
Post a Comment