ரிஷாத் மற்றும் ரியாஜ்ஜின் மனைவிமார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

ரிஷாத் மற்றும் ரியாஜ்ஜின் மனைவிமார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் மனைவி, சிஹாப்தீன் ஆய்ஷா, ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் ஆகியோர் சட்டத்தரணி ஆர்ணல்ட் பிரியந்தன் ஊடாக இந்த முறைப்பாட்டை நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைத்துள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து தனது கணவரான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி முறைப்பட்டில் குறிப்பிட்டுள்ள நிலையில், அன்றையதினம் அதிகாலை 1.30 மணியளவில் தனது கணவர் வெள்ளவத்தை, பெட்ரிகா வீதியில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக ரியாஜ் பதியுதீனின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் அவ்விருவரின் மனைவிமார், ரிஷாத் மற்றும் ரியாஜ்ஜின் கைதும், தடுத்து வைத்தலும் சட்ட விரோதமனது என குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல், மதம் மற்றும் இன ரீதியிலான கைது நடவடிக்கையாகவே, குறித்த இருவரின் கைதும் உள்ளதாக அவர்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக ரிஷாத் பதியுதீன், தற்கொலை குண்டுதாரி ஒருவரின் குலோசஸ் எனும் செப்புத் தொழிற்சாலைக்கு சட்ட திட்டங்களுக்கு புறம்பாக அதிக செப்பினை விநியோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்படும் நிலையில் அது அடிப்படையற்றது என முறைப்பாட்டாளர் ஆவணங்களையும் இணைத்து கூறியுள்ளார்.

குறிப்பாக செப்பு விநியோகம், தனது கணவர் அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சின் கீழ் இடம்பெற்றாலும் அதில் அமைச்சருக்கு தலையீடு செய்ய முடியாது என முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலகம் ஊடாக குளோசஸ் நிறுவனத்துக்கு செப்பு வழங்க முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரை தொடர்பிலும் முறைப்படடாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரியாஜ் பதியுதீன் சார்பிலான முறைப்பாட்டில், அவர் ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதன் பின்னர் சாட்சியங்கள் இல்லை என விடுவிக்கப்பட்டதாகவும் தற்போது மீளவும் அதே விடயங்களை கூறி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இவ்விருவரின் கைதும் அரசியல், மத, மற்றும் இன ரீதியிலானது எனவும் அதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்ன, விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயசேகர உள்ளிட்டோர் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முறைப்பாட்டாளர்கள் தமது முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad