சீன பாதுகாப்பு அமைச்சரின் வருகைக்கும் துறைமுக நகர சட்ட மூலத்திற்கும் தொடர்பில்லை : மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் மீண்டும் வைரஸ் பரவல் தோற்றம் பெற்றுள்ளது - தயாசிறி ஜயசேகர - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

சீன பாதுகாப்பு அமைச்சரின் வருகைக்கும் துறைமுக நகர சட்ட மூலத்திற்கும் தொடர்பில்லை : மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் மீண்டும் வைரஸ் பரவல் தோற்றம் பெற்றுள்ளது - தயாசிறி ஜயசேகர

(செ.தேன்மொழி)

சீன பாதுகாப்பு அமைச்சரின் வருகைக்கும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்டமூலம் தொடர்பான விவகாரங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இதேவேளை கொவிட்-19 வைரஸ் பரவல் துரிதமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அனைவரும் பாதுகாப்பான இருப்பதுடன், அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாட்டு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் ஆடை தொழிற்சாலை திணைக்களத்திற்கான பயிற்சி ஆலோசகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை இராஜாங்க அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாக பரவலடைந்து வருகின்றது. இதன் காரணமாக குருணாகலை மற்றும் குளியாபிட்டி ஆகிய பகுதிகளில் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு முடக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு போதிய நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அரசாங்கம் நாட்டை முடக்காவிட்டாலும், மக்களை பாதுகாப்பான முறையில் பண்டிகைக்கால கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

எனினும் மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக மீண்டும் வைரஸ் பரவல் தொடர்பில் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை பாரியதொரு அச்சுறுத்தலாகும். இத்தகைய ஒரு நிலைமை எமது நாட்டுக்கு ஏற்படக்கூடாது.

அரசாங்கம் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி வழங்கி வருகின்றது. இந்நிலையில் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால், நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் பாதிப்பை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

இதேவேளை இந்தியாவிலுள்ள தொற்றாளர்களை நாட்டுக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு இலங்கையிடம் போதிய வசதிகள் இல்லை. இந்நிலையில் வீடுகளில் இருப்பவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சரின் வருகைக்கும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்ட மூலத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர் வேறொரு விடயம் சம்பந்தமாகவே நாட்டுக்கு வந்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கான முடிவுகள் கிடைக்கப் பெற்றதன் பின்னரே அது சார்ந்த தீர்மானங்கள் எடுக்கப்படும்.

இதன்போது வெளிநாட்டவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை நாம் அதிகரிக்க வேண்டுமே தவிர அதனை கட்டுப்படுத்த முயற்சிக்க கூடாது. முதலீடு செய்பவர்கள் சீனர்களா, ஜப்பானியரா என்று பார்ப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டுக்கு முதலீட்டாளர்களே அவசியமாக இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad