யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூர அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் - யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூர அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் - யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளையதினம் அனுஷ்டிக்கப்பட்ட உள்ள நிலையில் அது தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின் போது வட பகுதியில் எத்தனை ஆலயங்கள் மீது குண்டு வீசப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் எத்தனையோ மக்கள் இறந்தார்கள். தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த வேளையிலே தென் பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிச்சயமாக இருக்கின்றது.

அது உண்மைதான். இப்படியான ஒரு நிலையில் தென் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு நாங்கள் ஏன் நினைவு நிகழ்வுகளை செய்ய வேண்டும்? என்று ஒரு கேள்வி பலரிடையே நிச்சயமாக இருக்கின்றது.

ஆனால் சரியான ஒரு காரியத்தை ஒருவர் செய்யவில்லை என்பதற்காக, சரியான ஒரு காரியத்தை நாங்கள் செய்யாது இருக்கக்கூடாது. ஆண்டவர் இயேசு சொல்லுவார் பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அவற்றை எல்லாம் நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

அதேபோல், அவர்களுடைய துன்ப வேளைகளில் எங்களுடைய ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டியது எங்களுடைய கிறிஸ்தவ மக்களுடைய கடமையாகும். ஆகவே நாளையதினத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நாங்கள் செய்து எங்களுடைய ஆதரவினையும் அஞ்சலிகளையும் செலுத்துவதற்கு முன்வருவோம்.

இந்த வேளையிலே அரசாங்கத்திடம் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம். இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவு கூர்வதற்கு, அனுமதி வழங்கி அதற்கான பாதுகாப்புகளை நீங்கள் கொடுக்கிறீர்கள். அதற்காக நாங்கள் நன்றி சொல்கின்றோம்.

இதேபோல தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் 30 ஆண்டுகளாக அனுபவித்த போரின் போது, இறந்து போன ஆயிரக்கணக்கான மக்கள், இறந்துபோன இளைஞர், யுவதிகளையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த எங்களுக்கு அனுமதி தர வேண்டும். பாதுகாப்பு தர வேண்டும்.

அது நாங்கள் செய்ய வேண்டிய ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக இருக்கிறது என்பதையும் இந்த வேளையிலே தெரிவித்து, இதனை இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனை எடுத்து அனுமதிகளை விரைவில் வழங்க வேண்டும் என வினயமாக கேட்டுக் கொள்கிறேன்.

ஆகவே அனைத்து மக்களுடன் இணைந்து குறிப்பாக யாழ் மறைமாவட்ட ஆயர் குருக்கள் துறவிகள் அனைவரும் இணைந்து தாக்குதலில் இறந்து போனவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்கும் அதேபோல் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் ஆறுதல் கூறுவோம், எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழஇந்த நாட்டிலே சமாதானம் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment