சவூதி அரேபியாவின் வணிக வளாகங்களில் உள்நாட்டவர்களுக்கே வேலை - தொழிலாளர் சட்டத்தில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

சவூதி அரேபியாவின் வணிக வளாகங்களில் உள்நாட்டவர்களுக்கே வேலை - தொழிலாளர் சட்டத்தில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது

சவூதி அரேபியாவின் வணிக வளாகங்களில் சவூதி நாட்டவர்களை மாத்திரமே பணியமர்த்துவதற்கு அந்நாட்டின் தொழிலாளர் சட்டத்தில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. உள்நாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பை அதிகரிக்கும் புதிய நடவடிக்கையாக இது உள்ளது.

இதன்படி சவூதி ஆண் மற்றும் பெண்களுக்கு 51,000 தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் மூன்று புதிய தொழிலாளர் வழிமுறைகளை மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் அஹமது பின் சுலைமான் வெளியிட்டுள்ளார். 

இது அந்நாட்டின் சில்லறை விற்பனைகள் மற்றும் உணவகங்களில் மாற்றங்களை கொண்டுவருவதாக உள்ளது.

சவூதி அரேபியாவில் எண்ணெய் வருவாய் வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில் கடந்த காலங்களில் அதிகம் வெளிநாட்டு பணியாளர்களிடம் தங்கியிருந்த தொழில் துறைகளில் உள்நாட்டு பிரஜைகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் நெருக்கடிக்கு சவூதி அரசு முகம்கொடுத்துள்ளது.

இதில் வர்த்தக வளாகங்கள் மற்றும் அதன் முகாமைத்துவ நிலையில் சவூதியர் மாத்திரமே பணியாற்ற முடியும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

சில வேலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டபோதும் அந்த வேலைகள் பற்றி குறிப்பிட்டு கூறப்படவில்லை.

அதேபோன்று உணவகங்கள், கபே மற்றும் கேட்டரிங் வர்த்தகத்தில் சவூதி நாட்டவர்களை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டில் வேலையற்றோர் எண்ணிக்கையை 7 வீதமாகக் குறைப்பதற்கு மில்லியன் கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருளாதார சீர்திருத்தத் திட்டம் ஒன்றை 2016 இல் சவூதி அரசு அறிமுகம் செய்தது.

No comments:

Post a Comment