(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பொலிஸ் அதிகாரங்களை எக்காரணம் கொண்டும் மாநகர சபைகள் கையில் எடுக்க இடமளிக்க முடியாது. நகர மேயருக்கும் இது பொருந்தும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாட்டின் சட்டத்தை முறைதவறி செயற்படுத்த அரசாங்கம் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.
யாழ். மாநக ரசபை மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை தெரிவிக்கும் போதே அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில், யாழ் மேயர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து தமிழ் எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து தலையிட்டு, ஆராய்ந்து பார்க்க வேண்டுமென விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களுக்கு நாம் அறிவித்துள்ளோம். அரசாங்கமாக இந்த விடயத்திற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பது குறித்து விரைவில் அறியத்தருவோம் என்றார்.
இது குறித்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகையில், யாழ். மேயர் குறித்து தமிழ் எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் அவர் குறித்து பிரபலமான தொலைகாட்சி ஒன்றில் முதலில் செய்திகள் வெளியிடப்பட்டது.
பொலிசாரின் கடமையையும் மாநகர சபையா இன்று செய்கின்றது என குறித்த ஊடகம் கேள்வி எழுப்பியது. எங்கே இந்த நாட்டின் சட்டம் எனவும் கேள்வி எழுப்பினர். எனவே சட்டம் சரியாக செயற்பட்டாக வேண்டும்.
விடுதலைப் புலிகளின் ஆக்கிரமிப்பு காலத்தில் வடக்கில் எவ்வாறு பொலிசார் செயற்பட்டனர், நீதிமன்றங்கள் எவ்வாறு இயங்கியது என்பதை நாம் பார்த்தோம்.
எனவே பொலிஸ் அதிகாரங்களை எக்காரணம் கொண்டும் மாநகரங்கள் பயன்படுத்த இடமளிக்க முடியாது. நகர மேயருக்கும் இது பொருந்தும். இதுதான் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாகும் என்றார்.
No comments:
Post a Comment