(எம்.மனோசித்ரா)
ஆளுந்தரப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஏனைய பங்காளி கட்சிகள் தனித்து சந்திப்புக்களை நடத்துவதற்கான காரணி என்ன என்பது தொடர்பில் எமக்கு தெரியாது. எவ்வாறிருப்பினும் இவ்வாறு பங்காளிக் கட்சிகள் தனித்து செயற்பட ஆரம்பித்துள்ளதன் மூலம் பாரதூரமான செய்தியொன்றை கூறுகின்றன. அந்த பாரதூரமான செய்தியை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பல கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியமைத்து அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் பங்காளிக் கட்சிகள் தனித்த சந்திப்புக்கனை நடத்துகிறது என்றால் அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளன என்பது தெளிவாகிறது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்திற்குச் சென்று அங்கு மக்களிடம் தனது பிரச்சினைகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதோடு, மாத்திரமின்றி அவை தொடர்பில் ஆராய்வதற்கு நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றையும் நியமித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஏனைய அமைச்சர் பெயரளவில் வெறும் அமைச்சர்களாக மாத்திரமே உள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கு முன்னின்று செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட சகல தரப்பினரும் தனித்து செயற்பட ஆரம்பித்துள்ளதன் மூலம் வழங்கும் செய்தி மிகப் பாரதூரமானதாகும். இந்த பாரதூரமான செய்தியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.
No comments:
Post a Comment