(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
தோட்ட வைத்தியசாலைகள் தேவைக்கேற்ப படிப்படியாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படுமெனவும், அரச வைத்தியசாலைகளுக்கு அண்மையில் உள்ள தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படத் தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, வாய்மூல விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது 494 தோட்ட வைத்தியசாலைகள் காணப்படுவதாகவும், இதில் 44 தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்த தோட்ட வைத்தியசாலைகள் கண்டி, நுவரெலிய, பதுளை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றது.
தோட்ட வைத்தியசாலைகளுக்கு அண்மித்தப் பகுதிகளில் அரச வைத்தியசாலைகள் காணப்படுமாக இருந்தால், தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரத் தேவையில்லை எனவும் தெரிவித்த அவர், தேவைக்கு ஏற்ப படிப்படியாக அரசாங்கத்தின் கீழ் தோட்ட வைத்தியசாலைகளை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
தோட்ட வைத்தியசாலைகளுக்கு முக்கியவத்துவமளித்து செய்யக்கூடிய அனைத்து சுகாதார வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்குமெனவும் உறுதியளித்த சுகாதார அமைச்சர், நாட்டில் வைத்தியர்களுக்கானப் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment