வடக்கு, கிழக்கில் மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் அளப்பரிய பணியாற்றினார் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப் - இரங்கல் செய்தியில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

வடக்கு, கிழக்கில் மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் அளப்பரிய பணியாற்றினார் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப் - இரங்கல் செய்தியில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை நெருங்கிய வகையில் தொடர்புபட்டு ஆற்றிய அளப்பரிய பணிகளை தனிப்பட்ட முறையில் நான் நன்கறிவேன் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப் ஆண்டகையின் மறைவையடுத்து, அதிவணக்கத்துக்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்திறகுரிய இராயப்பு யோசேப் ஆண்டகையின் இறைபதமடைந்த செய்தியைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைகின்றேன்.

இத்துயர செய்தியை கேள்வியுற்ற நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களை மன்னார் மறைமாவட்டத்தின் குருக்கள், துறவியர், பொதுநிலையினர், ஆண்டகையின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் ஆண்டகை நெருங்கிய வகையில் தொடர்புபட்டு ஆற்றிய அளப்பரிய பணிகளை தனிப்பட்ட முறையில் நான் நன்கறிவேன்.

எமது இலங்கைத்திரு நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பவும் மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்தெடுக்கவும் பெரும் பங்களிப்பினை ஆயர் இராயப்பு யோசேப் நல்கியுள்ளார்.

மேலும் அவர் பேர்ச்சுவார்த்தைகளின் வழியாக நிலையான அமைதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

எனினும் எதிர்பாராதவிதமாக மக்கள் பிரதிநிதிகளுக்கிடையே மேற்படி கருத்தாடல்கள் முழுமையான வெற்றியை அளிக்கவில்லை.

எவ்வாறெனினும் அவரது இடைவிடாத முயற்சியும் அமைதிக்கான வழிகாட்டுதலும் பல்லின பல்சமய பண்பாட்டுமயமாக்கல் நல்லுறவுக்கும் ஆற்றிய பணியை நான் நினைவு கூறுகின்றேன்.

இறைவன் அவர் ஆன்மாவுக்கு நித்திய இளைபாற்றியை அருள்வாராக.

No comments:

Post a Comment