(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமையை ஒரு தரப்பினரது குறுகிய நோக்கிற்காக இரத்து செய்ய முடியாது. மாகாண சபை தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. தேர்தல் முiறைமைக்கு தீர்வு கண்டதன் பிறகு மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மினுவாங்கொட பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. பழைய தேர்தல் முறையிலா அல்லது புதிய தேர்தல் முறையிலா மாகாண சபை தேர்தலை நடத்துவது என்ற சிக்கல் நிலை காணப்படுகிறது.
இதற்கு கடந்த அரசாங்கத்தின் அரச தலைவர்கள் பொறுப்பு கூற வேண்டும். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என கூறிக் கொள்பவர்கள் மாகாண சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
மாகாண சபை தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து பாராளுமன்றத்தில் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
தேர்தலை விரைவாக நடத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அமைச்சரவையில் யோசனை முன்வைத்துள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து யோசனை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்முறை மாத்திரம் பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது உகந்தது என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. அனைத்து தரப்பினரது கருததுக்களும், யோசனைகளும் பரிசீலனை செய்யப்படுகிறது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமையை ஒரு தரப்பினரது குறுகிய நோக்கத்திற்காக இரத்து செய்ய முடியாது. மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போடுவது ஜனநாயக கொள்கைக்கு முரனாணது. மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.
மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் ஒன்றினைந்து போட்டியிட எதிர்பார்த்துள்ளோம். அதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment