பாம் எண்ணெய் இறக்குமதி தடையால் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படுமா ? : அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்கிறார் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

பாம் எண்ணெய் இறக்குமதி தடையால் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படுமா ? : அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்கிறார் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய

(எம்.மனோசித்ரா)

பாம் எண்ணெய் இறக்குமதி தடை காரணமாக தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படுமாயின் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், 'பாம் எண்ணெய் இறக்குமதி தடையின் காரணமாக தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்படுமா? ' என்று கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாம் எண்ணெய் இறக்குமதி தடை காரணமாக தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படுமாயின் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. எனவே சில மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

தேங்காய் எண்ணெய் தொடர்பான வர்த்தமானி குறித்து அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை. எனவே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இது தொடர்பில் கேட்டறிந்த பின்னர் மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எண்ணெய் பிரச்சினை திடீரென தோன்றியதல்ல. நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாகும். எவ்வாறிருப்பினும் தற்போது இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது. எனவே இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பதை விட ஏனைய காரணிகளே முக்கியத்துவமுடையவையாகும்.

இந்த விவகாரம் தற்போது சமூகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டிருக்காவிட்டால் ஏற்பட்டிருக்கும் நிலைமை என்ன என்று சிந்திக்க வேண்டும். எனவேதான் இது தொடர்பில் ழுழுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணப்பதற்கும், அத்தோடு இதனுடன் ஏதேனுமொரு அரச அல்லது தனியார் துறை அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad