புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது புதிய கொரோனா அலை உருவாகலாம் ! மக்கள் அசமந்த போக்குடன் செயற்படக் கூடாது என்கிறார் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 6, 2021

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது புதிய கொரோனா அலை உருவாகலாம் ! மக்கள் அசமந்த போக்குடன் செயற்படக் கூடாது என்கிறார் கெஹெலிய

(எம்.மனோசித்ரா)

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மக்கள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிடின் புதியதொரு அலை உருவாகக் கூடும். எனவே மக்கள் அசமந்த போக்குடன் செயற்படக் கூடாது. மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்குமாறும் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு இது தொடர்பில் பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

புத்தாண்டு காலத்தில் எவருக்கேனும் தொற்று ஏற்படுமாயின் தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணிய முதலாம் மற்றும் இரண்டாம் தொடர்பாளர்களை இனங்காண்பது மிகக் கடினமானதாகும். 

எனவேதான் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான சுற்று நிரூபம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வரையறைகளைப் பின்பற்றி சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுடன் புத்தாண்டை கொண்டாடுமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு பொதுமக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்குமாறு பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் ஆலோனை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் கொவிட் பரவல் தொடர்பில் அசமந்த போக்குடன் செயற்பட்டு வழமையைப் போன்று கொண்டாட முற்பட்டால் புதிய அலை உருவாகக் கூடும். எனவே பொது மக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment