A/L பரீட்சை பெறுபேறுகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் - செப்டெம்பரில் பல்கலையில் இணைய வாய்ப்பு - மே 10 இல் பல்கலைக்கழகங்களை திறக்க எதிர்பார்ப்பு - பாடசாலை திறப்பது தொடர்பில் மே 02 இல் முடிவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

A/L பரீட்சை பெறுபேறுகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் - செப்டெம்பரில் பல்கலையில் இணைய வாய்ப்பு - மே 10 இல் பல்கலைக்கழகங்களை திறக்க எதிர்பார்ப்பு - பாடசாலை திறப்பது தொடர்பில் மே 02 இல் முடிவு

2020 க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் முடிவுகள், இன்றிலிருந்து (28) எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் வெளியிடப்படுமென, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

க.பொ.த உயர் தர பரீட்சகைள் கடந்த ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற்றது. இப்பரீட்சைக்கு 362,000 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

கடந்த நாட்களில், வினாத்தாள் திருத்துபவர்கள், பரீட்சை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளினதும் உச்ச அர்ப்பணிப்பு காரணமாக, எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் முடிவுகளை வெளியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கலை, மற்றும் தொழில்நுட்ப பாடங்கள் தொடர்பான பிரயோக பரீட்சைகளை ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது. பெருமளவிலான பரீட்சார்த்திகள் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், இவ்வனைத்தையும் திறமையாக கடந்து செல்ல அர்ப்பணித்த அனைவருக்கும் கௌரவம் உரித்தாவதாக தெரிவித்த அமைச்சர், இதன் விளைவாக, மாணவர்களின் ஒரு வருட கல்வி வீணாகாமல் இவ்வாண்டு செப்டம்பரிலேயே பல்கலைக்கழகங்ளில் இணைய மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோய் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் மே 10ஆம் திகதி நாடு முழுவதுமுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அதுவரை ஓன்லைனில் விரிவுரைகள் இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் 27ஆம் திகதி பல்கலைக்கழகங்களை திறக்கவிருந்த நிலையில், கொவிட் பரவல் நிலை காரணமாக, அது பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மேலும் தெரிவித்த அமைச்சர், வாழ்க்கையில் எந்த இழப்பையும் சமாளிக்க முடியும் என்பதை நாம் அறிவோம். ஆனால் ஒரு மாணவருக்கு கல்வி கிடைக்கமால் போவது ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். 

ஏப்ரல் 30 வெள்ளிக்கிழமை வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவெனாக்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்க முடிவு செய்யப்பட்டது.

இச்சூழ்நிலையை நாங்கள் தினமும் மதிப்பாய்வு செய்கிறோம். நாங்கள் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் தினமும் தொடர்புகொண்டு, சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமைய முடிவுகளை எடுத்து வருகிறோம்.

எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக மே 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment