மதத் தலைவர்களின் சங்கடத்துக்கும் கைமாறு செய்யும் பலியாடாக றிஷாட்டை மாற்றியுள்ளனர் : மக்கள் காங்கிரஸ் கல்முனை மாநகர உறுப்பினர் கண்டனம் ! - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

மதத் தலைவர்களின் சங்கடத்துக்கும் கைமாறு செய்யும் பலியாடாக றிஷாட்டை மாற்றியுள்ளனர் : மக்கள் காங்கிரஸ் கல்முனை மாநகர உறுப்பினர் கண்டனம் !

மாளிகைக்காடு நிருபர்

அரசாங்கமும் கர்த்தினல் மல்கம் ரன்ஜித் ஆண்டகை அவர்களும் சங்கடத்துக்குள்ளான நிலமையை மீளச்சரி செய்யவே தலைவர் றிஷாட் பதியுதீன் கைது இடம்பெற்றிருக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலுக்கு இரண்டு வருடம் பூர்த்தி அன்று கார்த்தினால் நிகழ்த்திய அனுதாப உரையினால் அரசாங்கம் பெரும் சங்கடத்துக்குள்ளாகியது. அன்றையதினம் அனைத்து ஊடகங்கங்கள் வாயிலாகவும் கர்த்தினால் ஈஸ்டர் தாக்குதலுக்கு மறைமுகமாக அரசாங்கத்தை சாடியதையே பகிர்ந்திருந்தனர். ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்பதை விட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, கைப்பற்றிக் கொள்ள ஒரு தரப்பினரால் செய்யப்பட்டதென்றே அவர் தெரிவித்திருந்தார். அதேநாள் சமூக ஊடகங்களிலே பரவலாக காணப்பட்ட பின்னூட்டங்கள் யாவும் “கார்த்தினால் அவர்களே இப்பொழுதா உங்களுக்கு விளங்கியுள்ளது” என பதியப்பட்டிருந்தது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.

அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சகலரும் கருப்புச்சால்வை அணிந்து தமது எதிர்ப்பை இன்று சபை அமர்வில் வெளிக்காட்டிய பின்னர் சபா மண்டபத்தின் முன்றலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் பேசிய அவர், அரசாங்கம் பெரும் சங்கடத்துக்குள்ளாகிய நாளாகவே அன்றையதினம் பேசப்பட்டது. பலரது பார்வையில் கர்த்தினாலுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் உள்ள நல்ல உறவு அறுந்து விட்டதாகவே வியாக்கியானம் செய்யப்பட்டது. எனினும் அரசாங்கம் இது தொடர்பில் நிச்சயமாக கர்தினாலை அணுகியிருக்கும் என்பதே பலரது ஊகம். அதனை உண்மைப்படுத்தும் விதத்திலேயே மறுநாளே கார்த்தினால் செய்தியாளர் மாநாட்டை கூட்டி பல்டி அடித்தார். அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸவுக்கு ஏற்பட்ட நிலைமை கர்தினாலுக்கும் இடம்பெற்றிருக்குமா எனவும் ஊகிக்க வேண்டியுள்ளது.

தான் நேற்று கூறியது தவறுதலாக புரியப்பட்டுள்ளதாகவும் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் தாம் குறிப்பிட்டது உள்நாட்டு அரசியலை அல்ல சர்வதேச அரசியலையே என கத்தோலிக்கர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் குழம்பினார் கர்த்தினால். இந்த குழப்பத்துக்கு காரணம் நேற்றைய அறிக்கையை உடனடியாக திருத்திகூற அரசாங்கத்திடமிருந்து கார்த்திநாளுக்கு வந்த அழுத்தமா என பலரது சந்தேகங்களை கிளப்பியது.

கார்த்தினால் அவர்களது இரண்டாம் நாள் உரை ஒன்றுக்கொன்று முரணானது என அவரே உணர்ந்தததாலோ என்னவோ மீண்டும் அரசை கொஞ்சம் சாடி சமாளிப்பதற்காகவே மறைமுகமாக றிஷாட்டை இழுத்தார் “முஸ்லீம் தலைவர்கள் 20 க்கு வாக்களிக்காது தமது உறுப்பினர்களை 20 க்கு வாக்களிக்க செய்தது எமக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது இது அரசாங்கத்துக்கும் இவர்களுக்குமிடையில் உள்ள டீல் என நாம் நினைக்கின்றோம்” என முடித்துக் கொண்டார். 

ஈஸ்டர் தாக்குதலுக்கும் 20 வாக்களிப்பில் முஸ்லீம் உறுப்பினர்களின் நடந்துகொண்ட விதத்துக்கும் தொடர்பில்லையாயினும் கார்த்தினால் அவர்கள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்ததை திசை திருப்பும் பொருளாக முஸ்லீம் தலைவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் டீல் என மாற்றிக்கொண்டர்.

கார்த்தினால் முதல் அரசை விமர்சித்து மறுநாள் அதனை சமாளித்ததற்கான கை மாறாகவே கட்சி தலைவர் ரிஷாட் நடு நிசியில் கைது செய்யப்பட்டார். ரிஷாட் கைதில் அரசாங்க நிகழ்ச்சி நிரல்கள் பல இருந்தாலும் கைதுக்கான நேரடி காரணமாக இதனையே குறிப்பிட வேண்டும். இறுதியில் அரசாங்கத்தின் சங்கடத்துக்கு மாத்திரமன்றி மதத் தலைவர்களின் சங்கடத்துக்கும் கை மாறு செய்யும் பலியாடாக றிஷாட்டை மாற்றியுள்ளனர்.

சமாதானத்தை வலியுறுத்த வேண்டிய மதபோதகர்கள் இவ்வாறு எந்தவிதமான குற்றச்சாட்டிலும் தொடர்பில்லாத சிறுபான்மைத் தலைவர்கள் தொடர்பில் காட்டமாக அறிக்கைவிட்டு மாட்டிவிடுவது சமாதானத்துக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். இவ்வாறு இவர்கள் ஒவ்வொரு அஜெண்டாக்களுக்குமேற்ப சட்டத்தை வளைத்துகொண்டு போவார்களேயானால் ஈஸ்டர் தாக்குதலில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும்? எனகேள்வியெழுப்பினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad