2,500 படுக்கை வசதிகளை தயார் செய்யும் முப்படை - இராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை - உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டு பாதிப்பு குறைவு என்பதுடன் சுகாதார பிரிவின் செயற்பாடுகள் உயர்தரமானவை : பாதுகாப்புச் செயலாளர் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

2,500 படுக்கை வசதிகளை தயார் செய்யும் முப்படை - இராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை - உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டு பாதிப்பு குறைவு என்பதுடன் சுகாதார பிரிவின் செயற்பாடுகள் உயர்தரமானவை : பாதுகாப்புச் செயலாளர்

கொவிட்19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பினால் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அவற்றுக்கு முகம் கொடுக்கும் வகையில் 2,500 படுக்கைகளை தயார் செய்யும் நடவடிக்கைகளில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்தார்.

இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப் படைத் தளபதிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைகளுக்கமையவே முன்னேற்பாடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இராணுவம் 1,500 படுக்கைகளையும், கடற்படை 500 படுக்கைகளையும் விமானப் படை 500 படுக்கைகளையும் தயார் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு முழுவதையும் முற்றாக முடக்கும் எந்தவொரு தேவையும் தற்போதைக்கு இல்லையென்றும் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் மாத்திரமே முழுமையாக முடக்க தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது, கொரோனா தொற்று தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் மேலும் விளக்கமளிக்கையில் முழு நாட்டையும் முடக்குவது என்பது இலகுவான ஒன்றல்ல. அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தான் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிரதேசங்களை மாத்திரம் முடக்க அரசாங்கமும் சுகாதார தரப்பினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொவிட்19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் என்ற வகையில் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையிலான குழுவினர் படைத் தரப்பு சுகாதார தரப்பு மற்றும் புலனாய்வுத் தரப்பு ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகின் பலம் பொருந்திய நாடுகள் பல கொரோனாவுக்கு முன்னால் மண்டியிட்டுள்ள நிலையில் எமது நாடு இதுவரை குறைந்த பாதிப்பை பேணும் வகையில் சிறந்த செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதற்காக அனைத்து தரப்பினரும் வழங்கிவரும் பங்களிப்பு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள வழிகாட்டல்களை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறு வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றும் பட்சத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாரிய பாதிப்புக்களிலிருந்து நாட்டை பாதுகாக்க முடியும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிகாட்டினார்.

ஸாதிக் ஷிஹான்

No comments:

Post a Comment

Post Bottom Ad