இந்தியாவிலிருந்து வருவோர் குறித்து விசேட கவனம், சுகாதார தரப்பு பரிந்துரைகளுக்கமைய தீர்மானம் என்கிறார் அமைச்சர் பிரசன்ன - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

இந்தியாவிலிருந்து வருவோர் குறித்து விசேட கவனம், சுகாதார தரப்பு பரிந்துரைகளுக்கமைய தீர்மானம் என்கிறார் அமைச்சர் பிரசன்ன

விமான நிலையத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல் அல்லது சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு கட்டுப்பாடுகளை விதித்தல் தொடர்பில் வழங்கப்படும் சுகாதார பரிந்துரைகளுக்கமைய எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் குறித்து விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன், பயணிகளின் வருகையை கட்டுப்படுத்தவும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். 

“கொவிட்19 வைரஸின் புதிய பரிமாற்றத்திலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கும் சுகாதாரத்துறையும் அரச இயந்திரமும் தயாராகவே உள்ளன.

அதன்படி, சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்துவது அல்லது சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப விமான நிலையத்தில் பயணக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தல் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும்.

திட்டத்தினூடாகவே இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். இங்கு எந்தவிதமான மோசடிகளும் இடம்பெறவில்லை. இப்போது கூட இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்தியாவின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாட்டிற்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள், தனி ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்தியாவுடனும் கலந்துரையாடி, இந்த நேரத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். என்றாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஒரே நேரத்தில் தடைசெய்து விமான நிலையத்தை மூடிவிட முடியாது.

சுற்றுலாப் பயணிகளை விட வெளிநாட்டில் பணிபுரியும் எமது இலங்கையர்களே அதிகமாக நாட்டுக்கு வருகின்றனர். இவர்கள் இலங்கைக்கு வருவதில் எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை. தனிமைப்படுத்தல் மையங்களில் இடப் பற்றாக்குறை இருந்தால், வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். 

இதேவேளை தற்போது பொதுமக்கள் விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் மட்டுமே விமான நிலையத்திற்குள் நுழைய முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad