(இராஜதுரை ஹஷான்)
இராணுவத்தினர் இனப் படுகொலையினை முன்னெடுத்தார்கள் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் அமைப்பினரே தமிழர்களின் அடிப்படை உரிமைகளை கேள்விக்குள்ளாக்கினார்கள். இலங்கையின் மனித உரிமை குறித்து விமர்னம் தெரிவித்துள்ள நாடுகளின் மனித உரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட 46|1 பிரேரணையினால் அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46|1 பிரேரணையை அரசாங்கத்தின் தோல்வி என எதிர்த்தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.
இப்பிரேரணை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டதல்ல மாறாக 30 வருட கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினருக்கு என்பதை எதிர்த்தரப்பினர் தெரிந்துகொள்ள வேண்டும். இதனை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஜெனிவாவில் இலங்கை விவகாரம் ஒவ்வொரு வருடமும் பேசப்படுகிறது. இதனால் சாதாரண தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் பெறாது.
தமிழ் மக்களின் உரிமைகளை இராணுவத்தினர் பறித்தார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் இளைஞர் யுவதிகளை விடுதலைப் புலிகள் அமைப்பினர் பலவந்தமாக போராட்டத்திற்கு இணைத்துக் கொண்டார்கள். சிறுவர்கள்கூட பலவந்தமான முறையில் போராளிகளாக்கப்பட்டார்கள். இதனை மனித உரிமை மீறலாக ஏன் சர்வதேசம் கருதவில்லை.
இலங்கையின் மனித உரிமைகளை விமர்சிக்கும் நாடுகளின் மனித உரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. பல அமெரிக்காவின் மனித உரிமைகள் தொடர்பில் முழு உலகமும் நன்கு அறிந்துள்ளது.
இவ்வாறான நிலையில் இவர்கள் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றமை குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை வெளிப்படைத் தன்மையுடன் அறிந்துகொள்ளலாம்.
நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையினால் இலங்கைக்கும், அரசாங்கத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இராணுவத்தினரையும், நாட்டின் சுயாதீனத் தன்மையினையும் எக்காரணிகளை கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார்.
No comments:
Post a Comment