(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
இலங்கையில் வடக்கு, கிழக்கில் மாத்திரம் அல்லாது சகல பகுதிகளிலும் உள்ள தொல்பொருள் பகுதிகளையும் ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் , கிராமிய சிற்ப கலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் எந்தவொரு இனத்தையும் இலக்கு வைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியான ஸ்ரீதரனால் தொல்பொருள் விடயங்கள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டது.
இதன்போதே ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய எம்.பிக்கள் இந்த தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை கடுமையாக எதிர்த்ததுடன் உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இதற்கு பதில் தெரிவித்த போதே அமைச்சர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தொல்பொருள் ஆய்வுகள் என்ற பெயரில் எந்தவொரு இனத்தையும், மதத்தையும் இலக்கு வைத்து நாம் செயற்படவில்லை. அதேபோல் எந்தவொரு இனத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றும் அல்ல. இந்த எல்லைகளை தாண்டி நாம் செல்ல வேண்டும் என்றே நினைக்கின்றோம்.
பெளத்த பகுதிகள் மட்டுமல்லாது இந்து ஆலயங்களையும் மீள் நிர்மாணம் செய்ய நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எனவே ஆய்வுகளின் மூலமாக மட்டுமே நாட்டின் தொன்மையான பகுதிகளை கண்டறிய முடியும். அதற்கு இடமளிக்க வேண்டும்.
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், இந்த தொல்பொருள் பிரதேசங்கள் பெளத்தர்களுக்கோ அல்லது இந்துக்களுக்கோ சொந்தமானவை அல்ல. இது முழு உலகிற்கும் சொந்தமானவை. அதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாம் தெற்கில் ஆய்வுகளை செய்யாது வடக்கில் மட்டும் ஆய்வுகளை செய்கின்றோம் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. ஆனால் இந்த பூமியில் எவ்வளவு தொல்லியல் பகுதிகள் உள்ளது என எம்மால் கண்டறிய முடியாதுள்ளது.
வடக்கில் மட்டும் அல்ல கிழக்குலும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான பிரதேசங்கள் உள்ளன. எனவே அதனை கண்டறிய எமக்கு அனுமதிக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து இந்த முயற்சியை கையாள வேண்டும். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு வேண்டும்.
இந்த முயற்சிகள் மூலமாக ஒரு இனத்தின் உரிமையை மாத்திரம் முன்னிறுத்தவில்லை. இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் இது குறித்து ஆழமாக பேசித் தீர்மானம் எடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment