தைரியம் இருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் சவால் விடுக்கின்றோம் - ஹேஷா விதானகே - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 24, 2021

தைரியம் இருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் சவால் விடுக்கின்றோம் - ஹேஷா விதானகே

(எம்.மனோசித்ரா)

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அதன் பிரதிபலன் எவ்வாறு அமையும் என்பதை அறிந்துகொண்டுள்ளமையால்தான் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகிறது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரப்பிரசாதம் வழங்கி 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிந்த அரசாங்கத்தினால் மாகாண சபை தொடர்பான சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வது கடினமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், தற்போது மாகாண சபைகள் தொடர்பில் புதிய நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்ற குற்றச்சாட்டிலிருந்து அரசாங்கத்திற்கு மீள வேண்டியுள்ள போதிலும், தேர்தலை நடத்துவதற்கு அஞ்சுகின்றது. எனவேதான் நாம் தேர்தலை நடத்த தயாராகவே உள்ளோம்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் காணப்படுகின்ற சிக்கல்களால் அதனை நடத்த முடியாமலுள்ள என்று போலியான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. 

அத்தோடு பௌத்த மதகுருமார்கள் ஊடாக மாகாண சபைகள் வேண்டாம் என்ற நிலைப்பாட்டையும் அரசாங்கமே தோற்றுவிக்கிறது. நம்பிக்கை, தைரியம் இருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் சவால் விடுக்கின்றோம்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் வழங்கி 20 ஆவது திருத்தத்தை அரசாங்கத்திற்கு நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனில், மாகாண சபை தொடர்பான சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வது கடினமானதாக இருக்காது. 

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகிறது என்பதே உண்மையாகும். தற்போது தேர்தலை நடத்தினால் எவ்வாறான பிரதிபலன் கிடைக்கும் என்பதை அரசாங்கம் நன்கு அறியும். ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு தேர்தலுக்கும் தயாராகவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad