ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் - அனல் பறக்கும் தமிழக சட்ட சபை தேர்தல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 24, 2021

ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் - அனல் பறக்கும் தமிழக சட்ட சபை தேர்தல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியும், தி.மு.க.வின் தலைவரான மு.க. ஸ்டாலினும் சேலத்தில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் ஒன்றாக மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்யவிருப்பதாக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 6ஆம் திகதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ராகுல் காந்தியும், மு.க. ஸ்டாலினும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். 

இது தொடர்பாக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ''மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டம் மார்ச் 28 ஆம் திகதியன்று சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறுகிறது.

இந்த பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.'' என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad