எதிர்க்கட்சியினரின் விடுபட்ட கேள்விகளை கேட்பதற்கு ஏப்ரலில் இரண்டு நாட்களை ஒதுக்குவதற்கு தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 24, 2021

எதிர்க்கட்சியினரின் விடுபட்ட கேள்விகளை கேட்பதற்கு ஏப்ரலில் இரண்டு நாட்களை ஒதுக்குவதற்கு தீர்மானம்

(ஆர்.யசி)

பாராளுமன்ற வாய்மூல வினாக்கான விடைகள் நேரத்தில் விடுபட்ட கேள்விகளுக்கு ஏப்ரல் மாதத்தில் இரண்டு நாட்கள் ஒதுக்கி முழு நேரமாக கேள்விகளை கேட்பதற்கு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு வழங்குவதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் நெருக்கடி நிலைமைகளில் பாராளுமன்ற காலத்தில் மாற்றங்களை செய்துள்ள நிலையில் வாய்மூல வினாக்கான விடைகளுக்கென ஒதுக்கப்படும் நேரத்தில் மாற்றங்கள் செய்துள்ள காரணத்தினால் எதிர்க்கட்சியினரின் பல கேள்விகள் தவறவிடப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி பிரதம கொறடாவானா லக்ஸ்மன் கிரியெல்ல, உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் கேள்வி எழுப்பினர். 

இந்திய இராணுவம் வடக்கில் இருந்த காலத்திலும், ஜே.வி.பீ. கலவர காலத்திலும் பாராளுமன்றத்தில் பிற்பகல் வேளையில் இரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு கேள்விகளை கேட்டுள்ளோம். அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு அப்போதே கேள்விகளை கேட்டு பதில்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். எனவே அரசாங்கம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடாவான கிரியெல்ல சபையில் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் எதிர்க்கட்சியினரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்த ஆளும் கட்சி சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, தற்போது விடுபட்டுள்ள கேள்விகள் தொடர்பில் ஏப்ரல் மாதத்தில் இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டு எதிர்க்கட்சியினருக்கு முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும், ஒரு நாளில் 50 கேள்விகள் என்ற அடிப்படையில் இரண்டு நாட்களில் முழுமையாக சகல கேள்விகளுக்கும் அரசாங்கம் பதில் தெரிவிக்கும் என்றார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுத்ததாகவும், ஆனால் எதிர்க்கட்சி சார்பில் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்கள் கட்சி தலைவர்கள் கூட்டத்தின் தீர்மானத்தை உறுப்பினர்களுக்கு கூறுவதில்லை என நினைப்பதாகவும் அதனாலேயே இவ்வாறான கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

எனினும் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் இந்த கூற்றை முழுமையாக நிராகரித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆறு மாதங்கள் கழித்து பதில் கூறுவதில் இருக்கும் பலன் என்ன எனவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad