அரசாங்கத்தின் இரட்டை கொள்கைகள் வெட்கப்பட வேண்டியவை, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது பாரிய தவறு - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

அரசாங்கத்தின் இரட்டை கொள்கைகள் வெட்கப்பட வேண்டியவை, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது பாரிய தவறு - மனுஷ நாணயக்கார

(எம்.மனோசித்ரா)

ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு கருத்தைக் கூறும் அரசாங்கம், உள்நாட்டில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இனவாதத்தை தூண்டும் வகையில் வேறு கருத்துக்களை கூறுகின்றது. அரசாங்கத்தின் இதுபோன்ற இரட்டை கொள்கைகள் வெட்கப்பட வேண்டியவை என்று பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், வன அழிப்பு எந்தவொரு பிரதேசத்திலும் இடம்பெறவில்லை என்று ஜனாதிபதி கூறுகின்ற போதிலும், தடுக்க முடியாதளவிற்கு பாரிய வன அழிப்புக்கள் இடம்பெறுவதாக பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார். இவை தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்துவது ஊடகங்களின் கடமையாகும். அவற்றின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல் விடுப்பது பாரிய தவறாகும்.

ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று பிடிவாதமாகக் காணப்பட்ட அரசாங்கம் ஜெனிவா சிக்கலை தீர்த்துக் கொள்வதற்காக அதன் தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளது.

இதேபோன்று மாகாண சபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் தேர்தலை நடத்த முடியாது என்பதில் உறுதியாகக் காணப்பட்ட அரசாங்கம் இந்தியாவின் அழுத்தம் காரணமாக தேர்தலை நடத்துவதற்கு அவசரப்படுகிறது. 

புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்தார். எனினும் ஜெனிவா நெருக்கடியை கருத்தில் கொண்டு அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் இதுபோன்ற இரட்டை கொள்கைகள் வெட்கப்பட வேண்டியவை. ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு கருத்தினைக் கூறும் அரசாங்கம், உள்நாட்டில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இனவாத கருத்துக்களையும் கூறுகின்றது. இவ்வாறான செய்பாடுகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று 14 மாதங்களுக்குள் 'உலகில் துக்கத்துடன் வாழும் நாடுகள்' பட்டியலில் இலங்கை 20 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜனாதிபதியால் உலகில் துக்கத்துடன் வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கையை 20 ஆவது இடத்திற்கு கொண்டு வர முடிந்துள்ளது.

இவ்வாறான நிலையில் இலங்கை நாணயத்தின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. நாணயத்தின் பெறுமதியுடன் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களும் வீழ்ச்சியடைந்துள்ளன. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வன அழிப்பு தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்துபவர்களுக்கும், இந்தியாவிற்கும், சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும், ஊடகங்களுக்கும் அஞ்சுபவராகவுள்ளார்.

கடந்த கால வரலாற்றில் ஊடகங்களுக்கு சிறந்த பாடம் புகட்டியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் அதனை செய்ய முடியும் என்றும் அச்சுறுத்தும் அளவிற்கு ஜனாதிபதி ஊடகங்களைக் கண்டு அஞ்சியுள்ளார். 

ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டியவையாகும். எனினும் அவற்றின் சுதந்திரத்தில் தலையிட்டு விரைவில் அதிகாரத்தை இழப்பதற்கான பாதையிலேயே அரசாங்கம் தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment