இந்தியா எம்முடன் இணைந்திருந்தால் மாத்திரமே இலங்கையின் பலம் அதிகரிக்கும் - திஸ்ஸ அத்தனாயக்க - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

இந்தியா எம்முடன் இணைந்திருந்தால் மாத்திரமே இலங்கையின் பலம் அதிகரிக்கும் - திஸ்ஸ அத்தனாயக்க

(எம்.மனோசித்ரா)

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காவிட்டால் அது பாதகமான நிலைமையை ஏற்படுத்தும். அயல் நாடான இந்தியா எம்முடன் இணைந்திருந்தால் மாத்திரமே இலங்கையின் பலம் அதிகரிக்கும். எனவே இந்தியாவின் ஆதவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யோசனை இலங்கை பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். குறித்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து மிக அவதானமாக செயற்பட வேண்டும். 

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையின் உள்ளக விவகாரங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன. நிர்வாக நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல காரணிகள் அவற்றில் உள்ளடங்குகின்றன. இவை எம்மால் திருத்திக் கொள்ளக் கூடியவையாகும். எனவே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காது அனைத்தும் ஒன்றாக்க முயற்சிக்கும் போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. 

அதற்காக இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை முழுமையாக சரி என்று நாம் கூறவில்லை. எனவே இது தொடர்பில் இலங்கை இராஜதந்திர மட்டத்தில் சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதே பொறுத்தமானதாகும். அவ்வாறில்லை எனில் பல அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

குறித்த யோசனையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கை மீது பயணத்தடை, பொருளாதாரத்தடை அல்லது வேறு ஏதேனும் தடைகளை விதிக்கப்பட்டால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர். எனவே நாடு மற்றும் மக்களைப் பற்றி சிந்தித்து உரிய முறையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 

சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் கூறவில்லை. எம்மால் இயன்ற மாற்றங்களை செய்வதற்கு இராஜதந்திர ரீதியில் செயற்படுமாறே வலியுறுத்துகின்றோம்.

ஜெனிவாவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் அது எமக்கு பாதகமான நிலைமையை ஏற்படுத்தும். எமது அயல் நாடான இந்திய எம்முடன் இணைந்திருந்தால் மாத்திரமே எமக்கு பலம் அதிகரிக்கும். எனவே இந்தியாவின் ஆதவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்குமெனில் அதற்கான காரணம் நாம் அந்நாட்டுடன் நட்புறவைப் பேணுவதற்கு பதிலாக விலகியுள்ளமையே ஆகும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை சில உள்ளக விவகாரங்கள் தொடர்பில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கக் கூடும். எனவே அவ்வாறான அழுத்தங்களிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்காமல் காலம் தாழ்த்துவதற்கான காரணம் என்ன? இது வெளியுறவுகளில் காணப்படும் பாரிய வீழ்ச்சியாகும்.

இலங்கைக்கு எதிரான பிரேரணை வெற்றி பெற்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பது எமக்குத் தெரியாது. எனினும் பல அழுத்தங்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படும். பயணத்தடை உள்ளிட்ட தடைகள் விதிக்கப்பட்டால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். 

காரணம் இலங்கை உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் நிலைமை உள்ள நாடு அல்ல. அதற்கான பலம் எம்மிடம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே இலங்கையின் சுயாதீனத்தன்மையை பாதுகாத்துக் கொண்டு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad