இலங்கையின் முதலாவது சுதேச மருத்துவ பல்கலைக்கழகமாக, கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்விழா நேற்று (01) யக்கலவில் உள்ள கம்பஹா விக்ரமராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதன் உத்தியோகபூர்வ திறப்பு விழா எதிர்வரும் வியாழக்கிழமை (04) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வரும், இலங்கையின் 16ஆவது தேசிய பல்கலைக்கழகமாக இது விளங்குகிறது.
1929ஆம் ஆண்டில் ஆயுர்வேத சக்ரவர்த்தி பண்டித் ஜி.பி. விக்ரமராச்சியினால் 20 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத நிறுவனம், இலங்கையில் சித்த ஆயுர்வேத மருத்துவ பாரம்பரியத்தை கற்பிப்பதற்கான மையமாக பிரபலமானது.
இதற்கு முன்னர் களனி பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த இந்நிறுவனம், இன்று தனி அங்கமாக, கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகமாக திறக்கப்பட்டுள்ளது.
77 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட இந்நிறுவனம் பல உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு சுதேச மருத்துவம் குறித்து கல்வி கற்பித்துள்ளதுடன், பல்கலைக்கழக அமைப்பில் அதன் தனித்துவமான நிலையை நிலைநிறுத்துவதற்கும், இலங்கையில் சுதேச மருத்துவ முறைகளைப் பாதுகாப்பதற்கும் அதிலுள்ள சவாலை எதிர்கொள்ளவுமான அதன் முயற்சியைத் தொடருவதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இப்பல்கலைக்கழகம் முழுநேர கல்வித் திட்டங்களைக் கொண்டிருப்பதோடு, இலங்கையின் சுதேச மருத்துவம் குறித்த பொது மக்களை ஊக்குவிப்பதற்கும் கல்வி கற்பதற்கும் ஒரு முயற்சியாக புதிய பகுதிநேர முதுகலை மற்றும் விரிவாக்க திட்டங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்வில், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி, கடற்கரை பாதுகாப்பு, கழிவுகள் அகற்றல் மற்றும் சமூக தூய்மையாக்கல் அமைச்சர் நாலக கொடஹேவ, சுதேச வைத்திய ஊக்குவிப்பு, கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் அபிவிரத்தி மற்றும் சமூக சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, கல்வி அமைச்சின் செயலாளர், சிரேஷ்ட பேராசிரியர் கே. கபில சி.கே. பெரேரா மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment