ஐ. நா. சாசனத்தில் கையெழுத்திட்டிருந்தால் அதற்கேற்பவே செயற்பட வேண்டும், மாறாக அரசு விருப்பத்திற்கேற்ப செயற்பட முடியாது - லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

ஐ. நா. சாசனத்தில் கையெழுத்திட்டிருந்தால் அதற்கேற்பவே செயற்பட வேண்டும், மாறாக அரசு விருப்பத்திற்கேற்ப செயற்பட முடியாது - லக்ஷ்மன் கிரியெல்ல

(எம்.மனோசித்ரா)

ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் 25 வீதமான விடயங்கள் மாத்திரமே யுத்தம் தொடர்பானவையாகும். ஏனைய 75 வீதமும் இலங்கையின் ஜனநாயகம், நீதிமன்ற சுயாதீனத்தன்மை, சிறுபான்மை இனத்தவர்கள் நடத்தப்படும் விதம், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்டவை தொடர்பானவையாகும். எனவே முரண்பாடுகளின் ஊடாக அன்றி, சுமூகமான பேச்சுவார்த்தைகள் ஊடாக இந்த நெருக்கடிக்கு தீர்வினை காண வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசணத்தில் கையெழுத்திட்டிருந்தால் அதற்கேற்பவே செயற்பட வேண்டுமே தவிர தன் விருப்பத்திற்கேற்ப அரசாங்கத்தால் செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்டார் .

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் மாத்திரமல்ல. நாமும் எமது நாட்டை நேசிக்கின்றோம். எனவே உண்மையில் நாட்டை நேசிப்பதாயின் சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஆனால் தற்போது அரசாங்கத்திற்கு முகவரியும் இல்லாமல் போயுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் கையெழுத்திட்டிருந்தால் அதற்கேற்பவே செயற்பட வேண்டும். மாறாக அரசாங்கத்திற்கு அதன் விருப்பத்திற்கேற்ப செயற்பட முடியாது. ஊடக சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை பாதுகாக்க வேண்டும். இறையான்மை எனக்கூறி இவற்றின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்க முடியாது.

மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை முழு உலகிற்கும் உரித்துடையதாகும். ஏதேனுமொரு நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகிறது என்றால், அது தொடர்பில் ஏனைய நாடுகள் ஐ.நா. வில் கருத்து தெரிவிக்க முடியும். அதற்கமைய இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ஏனைய நாடுகளுக்கு உரிமை இருக்கிறது.

எனினும் தற்போது கட்டுப்பாடின்றி பள்ளத்தில் செல்லும் வாகனத்தைப் போல அரசாங்கம் பயணித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியது. தற்போதைய அரசாங்கம் நிலையற்ற கொள்ளையுடையதாகும். அதனால்தான் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு விடயத்தையும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பிரிதொரு விடயத்தையும் கூறிக் கொண்டிருக்கிறது.

ஐ.நா. வில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் யுத்தம் தொடர்பில் 25 வீதமான விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 75 வீதம் இலங்கையின் ஜனநாயகம், நீதிமன்ற சுயாதீனத்தன்மை, சிறுபான்மை இனத்தவர்கள் நடத்தப்படும் விதம், மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்டவை தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 இல் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கையை ஐ.நா. வின் மின்சார கதிரையிலிருந்து காப்பாற்றியது.

இவ்வாறான விடயங்கள் சுமூகமான பேச்சுவார்த்தைகள் மூலம் கையாளப்பட வேண்டியவையே தவிர, முரண்பாடுகள் மூலம் கையாளப்பட வேண்டியவையல்ல. தொடர்பாடல்களை பேண வேண்டியது அத்தியாவசியமானதாகும். எதிர்கட்சியுடன் கூட தொடர்பாடல்களை முன்னெடுக்காத அரசாங்கம் எவ்வாறு சர்வதேசத்துடன் அதனைப் பேணும் ? என்றார்.

No comments:

Post a Comment