கூட்டமைப்பு தனது 16 ஆசனங்களையும் மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு பயன்படுத்தி தமிழர்களுக்கு துரோகமிழைத்தது - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

கூட்டமைப்பு தனது 16 ஆசனங்களையும் மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு பயன்படுத்தி தமிழர்களுக்கு துரோகமிழைத்தது - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது 16 ஆசனங்களை மாகாண சபைத் தேர்தல் பிற்போடுவதற்கு பயன்படுத்தி தமிழர்களுக்கு துரோகமிழைத்தது. தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றவுடன் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் போலியான குற்றச்சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜக்ஷ தலைமையிலான பலமான அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளது.

சுற்றுச்சூழல் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. என்று பொய்யான குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இடம்பெறும் காடழிப்பு புகைப்படங்களை காண்பித்து சிங்கராஜ வனம் அழிக்கப்படுவதாக வதந்திகள் பரப்பி விடப்படுகின்றன. இதற்கு சிவில் அமைப்புக்களும் துணை செல்கின்றன.

சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. காடழிப்பு சம்பவங்கள் இடம்பெறுமாக இருந்தால் புகைப்படம் எடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்வதால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறாது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பல அமைப்புக்கள் காணப்படுகின்றன. அவற்றில் முறைப்பாடளிக்கலாம். அல்லது பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடளிக்கலாம்.

மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பேசப்பட்டுள்ளன.

மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியை தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலுக்கு செல்ல விரும்பவில்லை.

மாகாண சபை முறைமை தேர்தல் முறைமை இரத்து செய்யப்பட்டது. புதிய தேர்தல் முறைமையும் முரண்பாடான தன்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. 

இவ்வாறான பின்னணியில் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தமது 16 ஆசனங்களை அரசாங்கத்திற்கு ஆதரவாக பயன்படுத்தினார்கள்.

ஆகவே மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்தை எவரும் விமர்சிக்க முடியாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல்களுக்கு சட்ட ரீதியில் தீர்வு காண்பது அவசியம். பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவுடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment