இந்தியாவில் இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி கைது - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

இந்தியாவில் இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி கைது

இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சுவீடனைச் சேர்ந்த சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா துன்பெர்க் டுவிட்டரில் பகிர்ந்த `டூல் கிட்` தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த மாணவியும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான சுற்றுச்சூழல் ஆர்வலருமான 22 வயதான திஷா ரவி நேற்று ஞாற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என டில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக டில்லியில் 80 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையே குடியரசு தினத்தில் நடைபெற்ற உழவு இயந்திர பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தூண்டியதாக டில்லி பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பாக டுவிட்டரில் உலாவிய ‛டூல் கிட்' ஆதாரமாக உள்ளதாக தெரிவித்தனர்.

‛டூல் கிட்' (Toolkit) என்பது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டுவீட் செய்ய என்னென்ன செய்திகள் போடலாம் என்று கொடுக்கப்படும் தொகுப்பு ஆகும்.

டில்லி பொலிஸ் குறிப்பிட்ட டூல் கிட்டை சூழலியல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், இந்த டூல் கிட்டை பெங்களூரை சேர்ந்த பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து திஷா ரவி மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, டில்லி பொலிஸாரின் சைபர் பிரிவு கைது செய்தது.

பெங்களூருச் சேர்ந்த 22 வயதான திஷா ரவி, கல்லூரி படிப்புக்கு இடையே தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார்.

மேலும், ‛பிரைடே பார் பியூச்சர்' என்ற பெயரில் செயல்படும் போராட்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட திஷா ரவி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர், கிரேட்டா துன்பெர்க்கின் வாசகங்களில் 2 வரிகளை மட்டுமே திருத்தி, மற்றவர்களுக்கு அனுப்பியதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து அவரை 5 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

திஷா ரவியை கைது செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். டில்லி முதல்வர் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா, சசி தரூர், இடதுசாரியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் டில்லி போலீசின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad