நல்லாட்சி அரசாங்கம் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை - சிறுநீரகப் பிரச்சினையுள்ள பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை : மட்டக்களப்பில் அமைச்சர் சனத் நிசாந்த - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

நல்லாட்சி அரசாங்கம் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை - சிறுநீரகப் பிரச்சினையுள்ள பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை : மட்டக்களப்பில் அமைச்சர் சனத் நிசாந்த

பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் பிள்ளையான் போன்றவர்களை பழிவாங்கியதே தவிர எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை என கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நீர் வழங்கல், வடிகாலமைப்பு அதிகார சபை, சமூக நீர் வழங்கல், திணைக்களம், நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டு குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய இந்த பாதுகாப்பான குடிநீர் வழங்கும் செயற்றிட்டத்தின் நடமாடும் சேவையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பெருமளவானோர் நன்மை பெற்றனர்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாங்கள் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நிலவும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 வீதமான சுத்தமான குடிநீர் தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இங்கு 51 பதிவு செய்யப்பட்ட கிராமிய நீர் வழங்கல் சங்கங்கள் இருக்கின்றது. அதில் 17 சங்கங்கள்தான் இயங்கு நிலையில் இருக்கின்றது. அனைத்து சங்கங்களையும் செயற்பாட்டு ரீதியான சங்கங்களாக மாற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

விசேடமாக நீர் வழங்கல் அதிகார சபையின் ஊடாக எதிர்வரும் மூன்று வருட காலத்திற்குள் 85 வீதமான குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.

பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் இப்பகுதியில் பாரியளவிலான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் பொய்களைக்கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் பிள்ளையானை பழிவாங்குவதில் குறியாக இருந்தார்களே தவிர அபிவிருத்திகளை நோக்காக கொண்டு செயற்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுநீரகப் பிரச்சினை அதிகமாகவுள்ள பகுதிகள் தொடர்பான தகவல்களை மாவட்ட செயலகம் தருமானால் இந்த ஆண்டுக்குள் அப்பகுதிகளில் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஏனைய அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதிகளை விட அதிகமான நிதியை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ இந்த திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளார்கள். அதனால் குடிநீர் பிரச்சினையுள்ள பகுதிகள் தொடர்பான தகவல்களை வழங்கும் நிலையில் அப்பகுதிக்கான குடிநீரை வழங்குவதற்கு தயாராகயிருக்கின்றோம்.

இங்கு சில கட்சிகள் இருக்கின்றன. அவை மூளையினை சலவை செய்து தங்களுக்கான அரசாங்கத்தினை உருவாக்க வேண்டும், தமிழீழத்தினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் இங்குள்ள வியாழேந்திரன், சந்திரகாந்தன் போன்றவர்கள் மக்கள் பிரச்சினைகளை உண்மையாக அடையாளம் கண்டு அவற்றினை தீர்க்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றபோது அந்த யுத்தத்தினை நடாத்திய பிரபாகரன் போன்ற தலைவர்கள் தங்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு கல்வி கற்பதற்கு அனுப்பிவிட்டு சுகபோக வாழ்க்கையினை அனுபவித்த அதேநேரத்தில் இங்குள்ள அப்பாவி இளைஞர்களை கழுத்தில் சயனைட் வில்லைகளை அணிந்து மகன் ஒரு பங்கரிலும் மகள் ஒரு பங்கரிலும் இருந்து யுத்தம் செய்தார்கள்.

ஆனால் துப்பாக்கி முனையினால் செய்த முடியாதவற்றினை பேனை முனையினால் செய்ய முடியும் என்பதை நீங்கள் வியாழேந்திரன், பிள்ளையானுக்கு வாக்களித்ததன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளீர்கள். அவர்கள் சார்பான அனைத்து விடயங்களையும் செய்வதற்கு நாங்கள் தயாராகயிருக்கிறோம்.

மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad