இனங்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாட்டை அரசாங்கமே தோற்றுவித்தது : ஓமல்பே சோபித தேரர் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

இனங்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாட்டை அரசாங்கமே தோற்றுவித்தது : ஓமல்பே சோபித தேரர்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியும் என அரசாங்கம் எந்நிலைப்பாட்டில் இருந்து அறிவித்துள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். சர்வதேச நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து அரசாங்கம் செயற்படுகிறது. உடல்களை புதைப்பதா அல்லது தகனம் செய்வதா என்ற விடயத்தில் இனங்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாட்டை அரசாங்கமே தோற்றுவித்தது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை அரசாங்கம் முழுமையாக தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டது. ஒரு நாடு ஒரு சட்டம் என்பதை உறுதியாக பின்பற்றுதாக குறிப்பிட்டவர்கள் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தற்போது கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

தேசப்பற்று, ஒரு நாடு ஒரு சட்டம் ஆகியவை அரசாங்கத்திற்கு வெறும் தேர்தல் கால பிரசாரம் என்பதை பெரும்பான்மை மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். பொதுத் தேர்தலில் அரசாங்கம் பௌத்த சிங்கள மக்களை கவர்வதற்காக ஒரு நாடு ஒரு சட்டம் என்ற விடயத்தை பிரசாரமாக்கி அதில் பயன் பெற்றுக் கொண்டது.

கொவிட்-19 தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியும் என துறைசார் வைத்திய நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்தும் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. உடல்கள் தகனம் செய்யப்படும் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்பது உறுதி என்று பலமுறை ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொண்டார்கள். இதனை கொண்டு சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை அரசாங்கம் தோற்றுவித்தது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் ஏன் திடீரென எடுக்க வேண்டும். சர்வதேச நாடுகளின் விருப்பத்திற்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. 

நாட்டின் இறையாண்மை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். ஆகவே நாட்டு மக்கள் இனியாவது புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment