சில தேசிய கிரிக்கெட் வீரர்கள், பயிற்றுநர்கள், தெரிவாளர்கள் ஆகியோர் மீது சில தரப்பினர் தமது சொந்த நலனுக்காக சுமத்தும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் குறித்து தனது கடும் அதிருப்தியை வெளியிட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமயக் குழுவின் நிகழ்ச்சி நிரலை இலங்கை கிரக்கெட்டின் சமகால நிருவாகிகள் ஊக்குவிப்பதாக அந்தத் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் அந்த சமயக் குழுவை போர்ன் எகெய்ன் என குற்றம் காண்பவர்கள் விபரித்துள்ளனர்.
எவ்வித ஆதாரமுமற்ற இந்த தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கின்றது.
கிரிக்கெட் விளையாட்டு இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையாலும் மிகவும் ஆவலுடன் பின்பற்றப்படுகின்றது என்பதையும் பன்மைத்துவ பின்புலங்கள், இனங்கள் மற்றும் சமயங்கள் ஆகியவற்றைக் கொண்ட நாட்டை ஐக்கியப்படுத்தும் பிரதான விளையாட்டு என்பதையும் அத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு எச்சரிக்க விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1996 உலகக் கிண்ணத்தையும் 2014 இல் இருபது 20 உலகக் கிண்ணத்தையும் மற்றும் ஆசிய கிண்ண வெற்றிகள் போன்ற மற்றைய மகத்தான வெற்றிகளின்போது இலங்கை தேசிய அணிகள் முழு நாட்டினதும் மக்களினதும் நேசத்தையும் பாசத்தையும் அனுபவித்திருந்தன.
இனம், நிறம், சமயம், பண்பு, கலாசாரம், இன வம்சாவழி, தேசியம், பால், பாலினம், பாலியல் நோக்குநிலை, இயலாமை, திருமண அந்தஸ்து, மற்றும் அல்லது மகப்பேறு அந்தஸ்து ஆகிய எதையும் பொருட்படுத்தாமல் சகல மட்டத்தினரும் பங்கேற்பதை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் ஐசிசியும் அதன் உறுப்பு நாடுகளும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பாகுபாட்டுக்கு எதிரான கொள்கைக்கு அமைவாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்படுகின்றது என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமுதாயத்தின் சகல நிலைகளிலுமுள்ள ஆற்றல் மிக்க வீரர்கள் இலங்கை தேசிய அணியில் இடம்பெறுவதை இந்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அத்துடன் சிலர் விளையாட்டின் ஜாம்பவான்களாக உயரிய நிலையை அடைந்தனர். இலங்கை கிரிக்கெட்டின் பாகுபாடற்ற கொள்கை காரணமாகவே அவர்களுக்கு தேசிய அணியில் உரிய இடம் வழங்கப்பட்டது.
அவரவர் விருப்பத்துக்கு அமைய சமயம் ஒன்றை பின்பற்றுவது மற்றும் விசுவாசிப்பது உட்பட மத சுதந்திரத்துக்கு இலங்கை ஜனநாயகக் குடியரசின் யாப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமையை இலங்கை கிரிக்கெட் மதிக்கும் அதேவேளை, ஒருவரது சமயத்தையோ அல்லது அவரது விசுவாசத்தையோ இலங்கை கிரிக்கெட் ஒருபோதும் கருத்தில் கொள்ளாது. அது இலங்கை கிரிக்கெட் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை.
எனவே, ஒரு சமயக் குழுவின் நிகழ்ச்சி நிரலை இலங்கை கிரிக்கெட் செயற்படுத்தவில்லை என்பதை இலங்கை கிரிக்கெட்டின் அன்புக்குறிய இரசிகர்களுக்கும் நாட்டின் பொதுமக்களுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது.
அத்துடன் ஒரே அணி ஒரே தேசம் என்ற புகழை எப்போதும் போல பேணுவதற்கு தேசிய கிரிக்கெட் அணியைச் சுற்றி திரளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment