இன, மத ரீதியாக சிந்திக்காது இணைந்து செயற்படுவதே ஆரோக்கியமானது - விக்கியின் அறிக்கைக்கு அமைச்சர் சரத் வீரசேகர பதில் - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

இன, மத ரீதியாக சிந்திக்காது இணைந்து செயற்படுவதே ஆரோக்கியமானது - விக்கியின் அறிக்கைக்கு அமைச்சர் சரத் வீரசேகர பதில்

18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவது தொடர்பான தனது கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் வரவேற்றிருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஒரு விடயத்திலாவது இருவருக்கும் உடன்பாடான கருத்து ஏற்பட்டிருப்பதை வரவேற்ற அவர், இராணுவ பயிற்சி வழங்கும் இந்த திட்டத்திற்கு சி.வி. விக்னேஸ்வரன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இராணுவ பயிற்சி அளிக்க உத்தேசித்துள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். 

இதற்கு எதிரணியில் பலரும் ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் அறிக்கையொன்றை வௌியிட்டிருந்த சீ.வி. விக்னேஷ்வரன் எம்.பி. இராணுவ பயிற்சி வழங்குவதை வரவேற்றதோடு வடக்கு கிழக்கில் தமிழ் மொழி அதிகாரிகளால் இந்த பயிற்சி வழங்க வேண்டும் எனவும் இதற்கு புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களை பயன்படுத்த முடியும் எனவும் கூறியிருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர ஒவ்வொரு பிரதேசத்திற்கும் இன, மொழி அடிப்படையில் பயிற்சி வழங்க முடியாது எனவும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு தனித்தனியாக அன்றி ஒன்றாக கலந்தே பயிற்சி அளிக்க இருப்பதாக குறிப்பிட்டார்.

இதனூடாக இனங்களுக்கிடையில் நற்புறவையும் நல்லிணக்கத்தையும் வளர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

பல விடயங்களில் இருவருக்கும் முரண்பாடான நிலைப்பாடுகள் இருந்தாலும் நாட்டுக்கு பொதுவான விடயத்தில் ஒத்துழைக்க முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், ஏனைய தமிழ் தலைவர்களும் இந்த வழியை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த செயற்பாட்டிற்கு சீ.வி. விக்னேஷ்வரன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

(ஷம்ஸ் பாஹிம்)

No comments:

Post a Comment