(இராஜதுரை ஹஷான்)
இந்திய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கை நிர்வாகத்தின் கீழ் முழுமையாக வசப்படுத்துவோம் என ஒருபோதும் குறிப்பிடவில்லை. இந்திய நிறுவனத்துடன் கூட்டிணைந்து அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்ட விடயத்தை ஊடகங்கள் திரிபுப்படுத்தியுள்ளன. எண்ணெய் தாங்கிகளை முழுமையாக பெற்றுக் கொள்வது குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேலும், திருகோணமலை எண்ணெய் தாங்கி தொடர்பில் 2017 ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தங்களை நீக்கி இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தாங்கிகளை இலங்கை வசமாக்குவதாக குறிப்பிடவில்லை. இந்திய நிறுவனத்துடன் கூட்டிணைந்து அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்ட கருத்தை ஊடகங்கள் திரிபுப்படுத்தியுள்ளன.
இந்திய நிறுவனம், கனிய வளங்கள் கூட்டுத்தாபனமும் ஒன்றிணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை தொடர்ந்து அபிவிருத்தி செய்வது குறித்து மாத்திரமே இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இலங்கை நிர்வாகத்தின் கீழ் எண்ணெய் தாங்கிகளை வசமாக்குவது குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை ஏதும் இடம்பெறவில்லை.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் போராடி மீள பெற முடியாது. இலங்கை இந்தியாவுடன் ஒனறினைந்து எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யும் என இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே 99 தாங்கிகளும் இந்திய நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் ஒன்றிணைந்து எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதாக பேச்சுவார்த்தையின் ஊடாக இணக்கப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை அரசாங்க தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தியா வசமுள்ள திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வெகுவிரைவில் இலங்கை வசமாகும். எண்ணெய் தாங்கி குறித்து 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நீக்குவதாக இந்திய உயர்ஸ்தானிகர் இணக்கம் தெரிவித்ததாக உதய கம்மன்பில கடந்த 17 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
இச்செய்தி பிரதான ஊடகங்களினது தலைப்பு செய்தியாக அன்றையதினம் வெளியானது. இவ்வாறான நிலையில் தான் குறிப்பிட்ட கருத்தை ஊடகங்கள் திரிபுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்து இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏதும் இரத்து செய்யப்படவில்லை என்றும், இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment