இந்தியா இலங்கைக்கு அழுத்தம் பிரயோத்துள்ளதாக கூறப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது - அமைச்சர் தாரக பாலசூரிய - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

இந்தியா இலங்கைக்கு அழுத்தம் பிரயோத்துள்ளதாக கூறப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது - அமைச்சர் தாரக பாலசூரிய

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் எவ்வித நெருக்கடியும் ஏற்படவில்லை. அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்ந்து நட்புறவுடன் செயற்படும். மேற்கு முனையம் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபை முழுமையாக அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கிய பிறகு இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோத்துள்ளதாக கூறப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது. 

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சுயாதீனமாக தீர்மானங்களை எடுக்கும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு.

கிழக்கு முனைய விவகாரத்தினால் இந்தியாவுடனான இராஜதந்திர உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்ந்து நட்புறவுடன் செயற்படும். 

மேற்கு முனையம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்மாதம் இடம்பெறவுள்ள 46 ஆவது கூட்டத் தொடரை அரசாங்கம் சிறந்த முறையில் கையாளும். 

சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினர் சமர்ப்பிக்கும் அறிக்கையினை கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படும்.

மனித உரிமை பேரவை தொடர்பில் சிவில் அமைப்புக்கள், தமிழ் தரப்புக்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. எத்தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் இம்முறை தீர்மானம் எடுக்கப்படும். 

நாட்டின் சுயாதீன தன்மையை பாதுகாத்து அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இணக்கமாக செயற்படும். எத்தரப்பினரையும் பகைத்துக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பில் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. 

இரண்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தரப்பினர் முன்வைக்கும் காரணிகள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment