85 சதவீத உரிமத்தை அரசாங்கம் பிற நாட்டவருக்கு வழங்க தீர்மானம் - காலி துறைமுகத்தின் 6 ஏக்கர் காணியை தனியார் நிறுவனத்துக்கு வழங்க முயற்சி : அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

85 சதவீத உரிமத்தை அரசாங்கம் பிற நாட்டவருக்கு வழங்க தீர்மானம் - காலி துறைமுகத்தின் 6 ஏக்கர் காணியை தனியார் நிறுவனத்துக்கு வழங்க முயற்சி : அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 85 சதவீத உரிமத்தை அரசாங்கம் பிற நாட்டவருக்கு வழங்க தீர்மானித்துள்ளது. கிழக்கு முனையத்தை பாதுகாக்க முன்னெடுத்த முயற்சியை மேற்கு முனையத்தை பாதுகாக்கவும் தொடருவோம். காலி துறைமுகத்தின் 6 ஏக்கர் நிலப்பரப்பை தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

துறைமுக ஊழியர் சேவையாளர் சங்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கத்தை அடிபணிய வைத்துள்ளோம். கிழக்கு முனையத்தை பாதுகாக்க மேற்கு முனையத்தை அரசாங்கம் பழி கொடுத்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும். 

கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபை முழுமையாக அபிவிருத்தி செய்ய முடியும் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம். கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையினால் முழுமையாக அபிவிருத்தி செய்ய முடியாது அதற்கான வளம் கிடையாது என அரசாங்கம் குறிப்பிட்டது. 

கடந்த 10 மாதம் 22 ஆம் ஆம் திகதி கிழக்கு முனையத்தின் 49 சதவீத உரிமத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கான யோசனையை துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

தேசிய வளங்களை விற்கமாட்டோம், விற்கப்பட்டுள்ள வளங்களை மீட்டெடுப்போம் என்று குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தேசிய வளங்களை விற்க முனைவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் தனது தீர்மானத்தை திருத்திக் கொண்டது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 85 சதவீத உரிமத்தை இந்திய நிறுவனத்துக்கு 35 வருட காலத்துக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

கிழக்கு முனையம் கை விட்டு போனதற்கு இந்தியாவும், ஜப்பானும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் பெறுமதியை வெளிநாட்டவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.

மேற்கு முனையத்தையும் துறைமுக அதிகார சபையினால் அபிவிருத்தி செய்ய முடியும். ஆகவே மேற்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். தேசிய வளங்களை பாதுகாப்போம் என ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அனைத்தும் பெயரளவில் மாத்திரமே குறிப்பிட்டுக் கொள்கின்றன.

காலி துறைமுகம் சுற்றுலாத்துறை துறைமுக தளமாக காணப்படுகிறது. இத்துறைமுகத்தில் உள்ள 6 ஏக்கர் நிலப்பரப்பு காணியை இரண்டு தனியார் நிறுவனங்களக்கு விற்பதற்கான நடவடிக்கைளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கு எதிராகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை இனி முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad