மக்களின் பிரச்சினை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபானின் கோரிக்கைக்கு கல்முனை மேயரினால் தீர்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

மக்களின் பிரச்சினை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபானின் கோரிக்கைக்கு கல்முனை மேயரினால் தீர்வு

நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர பிரதேசங்களில் மலசலகுழி சுத்தப்படுத்தல் சேவைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க மாநகர மேயர் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை கடந்த மாதம் ஊடகங்கள் வாயிலாகவும், கல்முனை மாநகரசபையின் சுகாதாரக்குழு ஊடாகவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபானினால் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 34வது கல்முனை மாநகர சபை அமர்விலும் முன்வைக்கப்பட்டிருந்தது.

கல்முனை மாநகர பிரதேசங்களில் வாழுகின்ற ஏழை மக்களின் நலன் கருதியே "சுமார் 8500 ரூபா வரை சேவை கட்டணமாக அறவிடும் சுத்திகரிப்பாளர்களின் பணியானது திருப்திகரமானதாக இல்லை என்பதோடு அதனை நிறைவான சேவையாக மாற்றப்படவேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். அமீரை தலைவராக கொண்ட குழு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி விரைவில் இந்த பிரச்சினைக்கான தீர்வை காண்பதாக சபை அமர்வில் இணக்கம் கண்டார்.

இதன்போது மாநகர சபை உறுப்பினர் பீ.எம்.ஷிபான் அவர்கள் மேயருக்கும் குழுவின் தலைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன் மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர் மாநகர சபை எல்லையில் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கான சேவைக் கட்டணமும், சோலை வரிக்கான கட்டணமும் தனித்தனியான படிவங்கள் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படுவதோடு அதில் காணப்படுகின்ற குளறுபடி நடவடிக்கைகள் முற்றிலுமாக திருத்தப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததுடன் உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

இந்த கோரிக்கைகளை கல்முனை மாநகர மேயர் ஏற்றுக் கொண்துடன் சபையும் அங்கீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment