ஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தாமை குற்றவியலாகாது: ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து சுதந்திர கட்சி விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

ஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தாமை குற்றவியலாகாது: ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து சுதந்திர கட்சி விளக்கம்

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களை செயற்படுத்தாமை குற்றவியல் சட்டத்தின் கீழ் உள்ளடங்காது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமைகளை முறையாக நிறைவேற்றியிருக்கிறார் என்பது ஆணைக்குழு அறிக்கையூடாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் தொடர்பில் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பிரதாயங்களுக்கமைய அரச தலைவர்கள் அல்லது அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதானது சட்ட ரீதியான சம்பிரதாயம் அல்ல. 

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் எந்தவொரு அரச தலைவருக்கு எதிராகவும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும் என்றும் சுதந்திர கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று குழு வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு - காலி முகத்திடல் ஹோட்டலில் கூடியது. 

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதற்கு நிறைவேற்று குழுவில் தீர்மானிக்கப்பட்டது. 

அதற்கமைய நிறைவேற்றுக் குழுவில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை சுதந்திர கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment