உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் தொழிநுட்ப குழுவுடன் கலந்துரையாடி நாட்டுக்கு பொறுத்தமான தீர்மானம் எடுக்கப்படும் - இராணுவத் தளபதி - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் தொழிநுட்ப குழுவுடன் கலந்துரையாடி நாட்டுக்கு பொறுத்தமான தீர்மானம் எடுக்கப்படும் - இராணுவத் தளபதி

(எம்.மனோசித்ரா)

முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ளவர்களுக்கே உருமாறிய புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொழிநுட்ப குழுவுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து நாட்டுக்கு பொறுத்தமான தீர்மானம் எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் வாரங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கு முன்னரே கொவிட் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டது. அதன் ஊடாக கொவிட் அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கான முன்னேற்பாடுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது.

அதற்கமைய தற்போது நாட்டில் சில பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை வைரஸ் கட்டுப்பாடுகளுக்குமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். தற்போது மிகக் குறைந்தளவானோருக்கே புதிய வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

ஜனவரி 26 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெற்ற மாதிரிகளிலிருந்தே புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு முன்னரும் உருமாறியதும் தன்மைகளில் வேறுபட்டதுமான 26 வகை வைரஸ் நாட்டுக்குள் கண்டறியப்பட்டுள்ளது. இவை வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்தவையாகும். அவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் என்பது விஷேட அம்சமாகும்.

பொம்பைமடு, முழங்காவில் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த நபர்களும் 21 நாட்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொழிநுட்ப குழுவுடன் இணைந்து எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களின் ஊடாக நாட்டுக்கு தேவையான பொறுத்தமான நடவடிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும்.

இந்தியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற 5 இலட்சம் தடுப்பூசிகளில் 250000 தடுப்பூசிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இரு வாரங்களின் பின்னர் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டாலும், 12 வாரங்களின் பின்னர் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கினால் சிறந்த பிரதிபலனை பெற்றுக்கொள்ள முடியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எனவே துரிதமாக எஞ்சியுள்ள 250000 தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே அடுத்து வரும் வாரங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகக் கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

இவை தவிர 9 இலட்சம் பேருக்கு வழங்குவதற்காக 18 இலட்சம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் முதற்கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad