விவசாயத்தினை செய்வதா?, மண் கொள்ளையர்களிடமிருந்து உயிர்களை காப்பதா? - வெள்ளாமைச்சேனை விவசாயிகளின் மனக்குமுறல் - News View

About Us

About Us

Breaking

Monday, February 15, 2021

விவசாயத்தினை செய்வதா?, மண் கொள்ளையர்களிடமிருந்து உயிர்களை காப்பதா? - வெள்ளாமைச்சேனை விவசாயிகளின் மனக்குமுறல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளாமைச்சேனை பிரதேச விவசாயிகளின் வயல் நிலங்களை சட்டவிரோத மண் கொள்ளையர்கள் தினமும் சூரையாடுவதால் வயல்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளாமைச்சேனை வயல் பிரதேசம் மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி நாவலடி சுற்று வட்டத்திலிருந்து எட்டு கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் போது, வலது பக்கம் நான்கு கிலோ மீற்றர் பயணத்தில் அமைந்துள்ள விவசாயப் பிரதேசம் தான் வெள்ளமைச்சேனைப் பிரதேசமகும்.

இங்கு, 470 விவசாயிகளின் 1410 ஏக்கர் வயல் நிலங்களும் இரு நூறு ஏக்கர் மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்குறிய காணிகளையும் கொண்ட அழகிய விவசாயப் பிரதேசமே வெள்ளாமைச்சேனைப் பகுதியாகும்.

குறித்த விவசாயப் பிரதேசத்தில் காணப்படும் வயல் நிலங்களை மண் கொள்ளையர்கள் உழவு இயந்திரத்தின் மூலம் தினமும் இரவு, பகல் நேரங்களில் மணல் அகழும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் தங்களது வயல் நிலத்தில் வேளாண்மை செய்யாத நிலையில் அந்த வயல் நிலத்தில் மண் அகழப்படுகின்றது.

அத்தோடு, வயல் செய்கைக்கு தண்ணீர் வரும் ஓடை, வாய்க்கால் என்பவற்றிலிருந்தும் மண் அகழப்படுகின்றது. இதன் காரணமாக, வயல்கள் உயரமாகவும், ஓடைகள் பள்ளமாக காணப்படுவதால் வயல்களுக்கு நீர் பாய்வதும் சிரமமாகவுள்ளது. இதனால் மண் அகழ்பவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டோம். சரி வரவில்லை. இது தொடர்பில் அவர்கள் எங்களைத் தாக்குவதற்கு முற்படுகின்றனர்.

எமது பிரதேசத்தில் மணல் அகழ்வது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களுக்குத் தெரியப்படுத்தினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை. நீங்கள் எங்கு முறையிட்டாலும் எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் அனுமதி பெற்று ஏற்றுகின்றோம் என மண் கொள்ளையர்கள் எங்களிடம் தைரியமாகக் கூறுகின்றார்கள் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மண் கொள்ளையர்களிடமிருந்து எங்களது வயல் காணிகளை மீட்டுத்தருமாறு பொலிஸ், இராணுவம், விஷேட அதிரடிப் படை ஆகியோருக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. வன இலாகா திணைக்களத்திடம் முறையிட்டோம். அதிலும் பலனில்லை. ஆனால், நாங்கள் ஒரு கம்பு வெட்டினால் பிடிப்பார்கள். மணல் ஏற்றினால் கண்டும் காணாமல் செல்கின்றனர். இது அதிகாரிகள் விவசாயிகளுக்கு செய்யும் அநியாயமாகும்.

விவசாயம்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று ஜனாதிபதி கூறுகின்றார். விவசாயம் இல்லாவிட்டால், இந்த நாட்டில் யாரும் வாழ முடியாது. ஆனால், இங்கு விவசாயத்தினை அழிக்கின்றனர். மணல் அகழும் பகுதியினை அண்டியுள்ள இராணுவ முகாம் சென்று வாருங்கள் என்று கூறினோம். அவர்கள் வருவதில்லை. நாங்கள் பொறுப்பல்ல. பொலிஸிடம் சொல்லுங்கள் என்கின்றனர். பின்னர் அங்குள்ள பொலிஸிடம் சொன்னால், இதனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சொல்லுங்கள் என்று குழந்தைப் பிள்ளைகளுக்குச் சொல்வது போன்று பதில் சொல்லப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சுமந்துகின்றனர்.

விவசாயிகள் சில வேளைகளில் இரவு நேரங்களில் வயல் காவலில் இல்லாத சமயத்தில் வரம்புக்கட்டையும் உடைத்து மணல் அகழ்கின்றனர். சில வேளைகளில், வேளான்மையையும் அழித்து மணல் அகழக்கூடிய நடவடிக்கையையும் மேற்கொள்வார்கள். பகல் மணல் அகழும் போது இவர்களுடன் சென்று அகழ வேண்டாம் என்றால், எங்களை கத்தி போன்ற ஆயுதங்களுடன் தாக்குவதற்கு முற்படுகின்றனர்.

நாங்கள் காலாகாலமாக மேற்கொண்டு வரும் விவசாயத்தினை செய்வதா? அல்லது மண் கொள்ளையர்களிடமிருந்து எங்களது உயிர்களைக் காப்பாற்றுவதா? என்ற போராட்டத்துக்கு மத்தியில் நாங்கள் தினமும் பல இன்னல்களை அனுபவித்து விவசாயத்தினை மேற்கொண்டு செல்ல வேண்டி துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், நாங்கள் அறுவடை முடிந்து வீடுகளுக்குச் சென்றால் எங்களது வயல்களிலும் மணல் அகழ்வார்கள் என நினைக்கின்றோம். சிறுபோகச் செய்கை மேற்கொள்ள வரும் போது எங்களது வயல் நிலங்களை தேடிப்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படுமென்று நாங்கள் நினைக்கின்றோம்.

சிறுபோகச் செய்கைக்கு வரும் போது விவசாயம் செய்யாது திரும்பிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுமோ என்ற அச்சத்துடன் நாங்கள் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மண் கொள்ளையர்களிடமிருந்து எமது மண்ணையும், வயல் நிலத்தையும் காப்பாற்றுங்கள்.

இவ்விடயம் தொடர்பில் பல தடவை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்தும் எந்தவிதப் பதிலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆனால், மணல் அகழும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகின்றது.

எனவே, உடனடியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான நசீர் அஹமட், கோ.கருணாகரன், இரா.சாணக்கியன், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் கூடிய கவனஞ்செலுத்தி எங்களது வயல் நிலங்களை பாதுகாக்க முன்வருமாறு விவசாயிகள் வேண்டிக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment