கூட்டணியமைத்துள்ளோம் என்பதற்காக பேச்சு சுதந்திரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை : 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்தில் முரண்பாடுகளுக்கு தீர்வு - திஸ்ஸ விதாரண - News View

About Us

About Us

Breaking

Monday, February 15, 2021

கூட்டணியமைத்துள்ளோம் என்பதற்காக பேச்சு சுதந்திரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை : 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்தில் முரண்பாடுகளுக்கு தீர்வு - திஸ்ஸ விதாரண

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வை காண்பதற்கும், கூட்டணியை பலப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விடயம் தொடர்பான கட்சி தலைவர் கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறும். அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் எவருக்கும் கிடையாது என ஸ்ரீலங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபகஷவிற்கு பொதுஜன பெரமுனவில் உரிய நிலை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்ட கருத்தை ஒரு தரப்பினர் பெரிதுபடுத்தி கூட்டணிக்குள் தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார்கள்.

பொதுஜன பெரமுனவில் கூட்டணியமைத்துள்ள பிரதான 10 கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக வதந்திகள் வெளியாகின.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் 12 கட்சிகள் ஒன்றிணைந்த வேளையில் இருந்து தேவையற்ற குற்றச்சாட்டுக்களை ஆளும் தரப்பினர் எமக்கு எதிராக முன்வைத்து வருகிறார்கள்.

தேசிய வளங்களை பாதுகாப்போம் என்று அனைவரும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளோம். அதனை பாதுகாப்பது அதனைத்து தரப்பினரது பொறுப்பாகும்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ளோம் என்ற காரணத்திற்காக பேச்சு சுதந்திரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. அரசாங்கம் தவறான வழியில் செயற்பட்டால் அதனை சுட்டிக்காட்ட ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்.

தேவையில்லாத பிரச்சினையை பெரிதுபடுத்தி அதனூடாக அரசாங்கத்தை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் ஆளும் தரப்பிற்குள் செயற்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

தவறுகளை எதிர்க்கட்சியினர் மாத்திரம் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை கிடையாது. தவறுகள் திருத்திக் கொண்டால் மாத்திரமே அரசியலில் தொடர்ந்து பயணிக்க முடியும்.

கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும். கூட்டணியை பலப்படுத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment