புதிய தவிசாளர்களைத் தெரிவு செய்யும் விடயத்தில் சமூகம் சார்ந்து தீர்மானங்களை எடுக்க வேண்டுமென முஸ்லிம் உறுப்பினர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தொங்கு சபைகளாகக் காணப்பட்ட சில சபைகளில் புதிய தவிசாளர்களைத் தெரிவு செய்யும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வாகரை மற்றும் செங்கலடிப் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரிவு நடைபெற்று முடிந்துள்ளது.
எனினும், ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வரும் மார்ச் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. அந்தச் சபையிலுள்ள 17 உறுப்பினர்களில் ஐவர் முஸ்லிம் சகோதர்களாகும். இந்த உறுப்பினர்கள் ஐவரும் ஒற்றுமையாகத் தமது சமூகம் சார்ந்து தீர்மானம் எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளனர். இது நல்ல விடயமாகும்.
ஆனால், முக்கியமான விடயம் என்னவென்றால், முஸ்லிம் சகோதர்களின் சமூகப் பிரச்சினையில் எரிதழலாக இப்போது இருப்பது கொரோனா வைரஸின் தாக்கத்தால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கின்ற விடயமாகும்.
இதனை, நூறு வீத முஸ்லிம் சகோதர்கள் எதிர்க்கின்றார்கள். அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதனை எதிர்க்கின்றது.
அத்துடன், பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற மக்கள் எழுச்சிப் பேரணியில் 10 அம்சக் கோரிக்கைகளில் ஜனாசா எரிப்பு விடயமும் ஒன்றாகும். இதற்கு முஸ்லிம் சகோதர்கள் பெருமளவில் திரண்டு ஆதரவளித்தார்கள். இவ்விடயம், தமிழ் பேசும் மக்களை இணைப்பதாகவும், ஒற்றுமைப்படுத்துவதாகவும் அமைந்தது.
இதேவேளை தற்போதைய நிலையில், ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் தெரிவில், முஸ்லிம் உறுப்பினர்களின் முன்பு இரண்டு தெரிவுகள்தான் உள்ளன.
அதாவது, ஜனாசாவை எரிப்பதற்கு எதிராகவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது. மற்றையது, ஜனாசாவை எரிப்பதற்கு ஆதரவாகவுள்ள அரசாங்கம் சார்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாக்களிப்பது ஆகும்.
இந்நிலையில், தமது சமூகம் சார்ந்து சிந்திக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஜனாசா எரிப்புக்கு எதிரான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குச் சார்பாக வாக்களிப்பார்கள் என நம்புகின்றோம். முஸ்லிம் தலைவர்களும் அதற்குரிய சரியான நெறிப்படுத்தலை செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
இதேவேளை, வாகரைப் பிரதேச சபையில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஜனாசா எரிப்புக்கு ஆதரவான அரசாங்கம் சார்ந்தவர்களுக்கு வாக்களித்தமை வேதனைக்குரிய விடயமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment