சுழியோடிகளின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை - நியாயமான தீர்விற்கும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

சுழியோடிகளின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை - நியாயமான தீர்விற்கும் நடவடிக்கை

கடற்றொழிலாளர்கள் சுழியோடுவதற்கு கடந்த ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட தடை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரைவில் நியாயமான தீர்வினை வழங்குவதற்கும் உறுதியளித்தார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் கேடபோர் கூடத்தில் அகில இலங்கை சுழியோடிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று (20.02.2021) இடம்பெற்ற சந்திப்பிலேயே குறித்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில், இரவு நேரங்களில் சுழியோடும் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சங்கத்தின் உறுப்பினர்கள் அமைச்சரிடம் வேண்டு கோள் விடுத்தனர்.

2019 மார்ச் மாதம் 22ம் திகதி ஐ.தே.கட்சியின் ஆட்சியில் அப்போதைய கடற்றொழில் அமைச்சரினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த தடை விதிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் 04 மைல் எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் இரவில் கடலட்டை பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டதாகவும் இச்சங்கத்தின் உறுப்பினர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

குறித்த 04 மைல் எல்லைப் பகுதியிலேயே பாறைகள் காணப்படுவதாகவும் அப்பகுதியிலேயே கடலட்டைகள், சிங்கிறால் மற்றும் சில வகை மீன்கள் காணப்படுமெனவும் விசேடமாக பூன் எனப்படும் ஒரு வகை கடலட்டைகள் இரவு நேரங்களிலேயே பிடிபடுமெனவும் சங்கத்தின் பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், குறித்த தடை காரணமாக தங்களது வாழ்வதாரம் மட்டுமல்லாமல் கடலட்டை ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய ஏராளமான அந்நியச் செலாவணி இழக்கப்படுவதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இச்சங்கத்தின் உறுப்பினர்களுடன் பேசுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (23.02.2021) கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், தேசிய நீரியல் வள அபிவிருத்தி முகவர் அமைப்பு (நாரா) மற்றும் கடற்படை உயர் அதிகாரிகளிடம் கலந்துரையாடி துரித மற்றும் சிறந்த தீர்வினைப் பெற்றுத் தருவதாகவூம் அன்றைய தினம் இச்சங்கத்தின் பிரதிநிதிகளும் அச்சந்திப்பில் கலந்து கொள்ளலாமெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment